
பகல் உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம் போடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பதை சிறிது விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.
பிற்பகலின் நடுவே உடல் சோர்வினால் கண்கள் செருகும். வேலையில் கவனம் பிசகும். இது நாம் மதிய உணவு உண்டதின் களைப்பினால் வந்ததல்ல. நம் உடலுக்குள் இருக்கும் சர்கார்டியன் ரிதம் என்னும் கடிகாரம் உண்டுபண்ணும் சுழற்சியாகும். இது உடலின் இயல்பான தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளை ஒழுங்குபடுத்துகின்ற 24 மணி நேர சுழற்சி ஆகும். பிற்பகல் மந்தநிலையும் இந்த சுழற்சியின் ஒரு பகுதியேயாகும். இதனாலேயே பலர் ஒரு மணியிலிருந்து 4 மணிக்குள் இந்த தூக்க நிலையை அடைகின்றனர். நாப் (Nap) எனப்படும், இந்த இருபது நிமிட அரைத் தூக்கத்திலிருந்துவிட்டு கண் விழிக்கையில் உடல் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்படையும். மனநிலை நல்ல மூடுக்குத் திரும்பும். நினைவாற்றலும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.
இருப்பினும் சிலருக்கு நாப், இரவுத் தூக்கத்தில் தொந்தரவை உண்டுபண்ணவும் செய்யும்.
குறுகிய கால நாப் மூளையை ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழைய விடாமல், மூளைக்கு சிறிது ஓய்வு மட்டும் தந்து உதவுகிறது. நாப் அரை மணி நேரத்திற்கு அதிகம் போகையில் மூளை ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுவிடும். மீண்டும் விழித்தெழுந்து செயல்பட மிகவும் சிரமப்படும். இந்த நிலையை ஸ்லீப் இனேர்ஷியா (sleep inertia) என்கின்றனர். தன்னிலை இழந்து பிடிப்பற்றிருக்கும் மூளையை எழுப்பிக் கொண்டு வருவது மிக சிரமம். மீண்டும் முக்கியமான வேலையை செய்யவும், முடிவுகளை எடுக்கவும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகலாம். மேலும் இரவிலும் தூக்கம் பாதிக்கப்படும். எனவே நாப் எடுக்கும் நேரத்தை 30 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்வதே ஆரோக்கியம்.
நைட் ஷிப்ட் வேலை பார்ப்போர், இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவோர், குழந்தை பெற்ற தாய் போன்றோர் பகலில் நாப் எடுத்துக் கொள்வது இரவில் தொலைத்த தூக்கத்தை ஓரளவுக்கு மேக்அப் பண்ண உதவும்.
அதிகளவு கவனத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கும் உடல் நலத்துறை ஊழியர்கள் மற்றும் விமான ஓட்டிகள் போன்றோர் திட்டமிட்டு தேவையான அளவு நாப் எடுத்துக்கொண்டபின் பணியைத் தொடர்வது, தவறில்லாமலும், கவனத்துடனும் வேலையை தொடர உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
26 நிமிட நாப் நீண்ட தூரம் விமானத்தை ஓட்ட வேண்டிய பைலட்களின் செயல் திறனை 34 சதவிகிதமும் எச்சரிக்கை உணர்வை 54 சதவிகிதமும் உயர்த்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
நாப் எடுப்பதில் பல நன்மைகள் இருந்தபோதும், அது யாருக்கெல்லாம் தேவை என்பதை ஒரு தனி நபரின் வயது, வாழ்வியல் முறை, தூக்கத்தின் இயல்பு போன்றவையே தீர்மானிக்க வல்லவை.
முறையாக நாப் எடுத்துக் கொண்டால் நன்மைகள் பெறலாம். தவறு ஏற்படும்போது இரவில் மேற்கூரையை நோக்கிய படி நேரத்தை கழிக்கவேண்டியதுதான்.