

சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சேவையைச் சோதித்துப் பார்க்கவும், பயணிகளின் கருத்துக்களைச் சேகரிக்கவும், ஒரு சோதனைக் கட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையாக இணைய வசதி கொண்ட முதல் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிவேக, நம்பகமான விமான இணைப்பு மூலம் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதில் சவுதியாவின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. சோதனை கட்டம் முடிவடைந்ததும், அனைத்து விமானங்களிலும் பயணிகளுக்கு இலவசமாக முழுநேர இன்டெர்நெட் சேவை வழங்கப்படும்.இந்தத் தொழில்நுட்பம் வினாடிக்கு 300 மெகாபிட் வேகத்தை வழங்குகிறது, எதிர்காலத்தில் இதன் வேகம் 800மெகாபிட் ஆக உயர்த்தப்படும்.
இது பயணிகள் இடையூறு இல்லாமல் பல சாதனங்களைப் பயன்படுத்தி உலவ, நேரடி உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய மற்றும் மெய்நிகர் கூட்டங்களில் சேர அனுமதிக்கிறது.
35,000 அடி உயரத்தில் SV1044 சோதனை விமானத்தின் போது, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் வாரியத்தின் தலைவருமான சலே அல்-ஜாசர் மற்றும் சவுதியா குழும இயக்குநர் ஜெனரல் எங். இப்ராஹிம் பின் அப்துல்ரஹ்மான் அல்-உமர் ஆகியோர் புதிய சேவையைப் பயன்படுத்தி 35000 அடி உயரத்தில் சவுதி புரோ லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்து உறுதி செய்தனர்.
அமைச்சர் அல்-ஜாசர், தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்ஸ்வாஹாவுடன் நேரடி தொலைக்காட்சி நேர்காணல் மற்றும் வீடியோ அழைப்பையும் நடத்தி, சோதனைசெய்தனர். இறுதி ஒழுங்குமுறை ஒப்புதல்கள் முடிந்ததும் இந்தத் திட்டம் தற்போதுள்ள மற்றும் புதிய அனைத்து விமானங்களுக்கும் விரிவடையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.