அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர் கூட்டமைப்பு (AISBISF) தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் (SBI) இந்தியா வங்கி தங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்காக வரும் மே 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வரும் மே 23-ம்தேதி நான்காவது சனிக்கிழமையாகவும் மற்றும் மே 24-ம்தேதி ஞாயிற்றுக் கிழமையாகவும் வருவதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மேலும் மே 27, 28-ம்தேதிகளில் சில மாநிலங்களில் பக்ரீத் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 6 நாட்கள் வரை SBI உள்ளிட்ட வங்கிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது வார இறுதிநாள் விடுமுறை மற்றும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வரை SBI வங்கி விடுமுறையில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பணி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடிய தற்போதுள்ள கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும், நீண்ட காலமாக தங்கள் தரப்பில் முன்வைக்கப்படக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்கள் அமைப்பு கூறியுள்ளது. தங்களுடைய கோரிக்கைகளை பலமுறை வங்கி நிர்வாகத்திடம் முன் வைத்தபோது அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
சம்பளப் பாகுபாடு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், NPS ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி மேலாளரை மாற்றும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கை கடிதத்தை கூட்டமைப்பு நிர்வாகத்திற்கு சமர்ப்பித்துள்ளது.
எனவே மே 23, 24, 25, 26, 27,28 ஆகிய ஆறு நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிகள் இயங்காது என்பதால் வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய வங்கிப் பணிகள் ஏதாவது இருந்தால் மே 23-ம்தேதிக்குள் முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த நாட்களில் ஆன்லைன் வங்கி, மொபைல் வங்கி, யுபிஐ மற்றும் ஏடிஎம் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.