

நீங்கள் வாங்கும் மருந்து பாதுகாப்பானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் இனிமேல் சரிபார்க்க முடியும். மேலும் அதுகுறித்து புகாரும் அளிக்க முடியும். ‘தரமற்ற, போலி மருந்துகள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, மருந்தகங்களில் இனிமேல் ‘QR'Code அதன் கட்டணமில்லா எண்ணான 1800-180-3024ஐ ஒட்ட வேண்டும் என்று மருந்து கடைகளுக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்(CDSCO) உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிப்' (Coldrif) என்ற இருமல் மருந்தைக் குடித்ததால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த மருந்தில் டைஎத்திலின் கிளைக்கால் (diethylene glycol) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது, இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு குழந்தைகள் பலியான நிலையில், மருந்தைத் தயாரித்த தமிழ்நாடு நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், குழந்தைகளின் மருந்துகளின் தரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், மருந்து தயாரிப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்பதையும் எடுத்துக்காட்டியது.
இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது. இதுபோன்ற போலி மருந்துகள் குறித்து 104 என்ற எண்ணில் மட்டுமே பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, ‘கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது. போலி மற்றும் தரமற்ற மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவும், தரத்தை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதை ஸ்கேன் செய்வதன் மூலம், பொதுமக்கள் மருந்தினால் ஏற்படும் எந்தவொரு பாதகமான மருந்து எதிர்வினையையும், தடிப்புகள் மற்றும் தலைச்சுற்றல் முதல் வீக்கம், குமட்டல் அல்லது மிகவும் கடுமையான சிக்கல்கள் வரை நேரடியாக ADRMS (Adverse drug reaction monitoring system)ல் தெரிவிக்கலாம்.
அதாவது, இதன் மூலம், மருந்துகளால் ஏதாவது பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக இதுகுறித்து குறிப்பிட்ட ‘கியூ ஆர்' குறியீடு வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகாரில் அடிப்படையில், உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.