ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை..! எவ்வளவு? என்ன தகுதி? முழு விவரம் இதோ!

குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
Published on

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான படிப்பு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய ஆசிரியர் நல நிதியம் சார்பாக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் இந்த படிப்பு உதவித்தொகையை பெற முடியும்.ஒரு ஆசிரியர் தனது ஒரு குழந்தைக்கு மட்டுமே இந்த கல்வி உதவித் தொகையை பெற முடியும்.

கல்வி உதவித்தொகையை பெறத் தகுதி பெற்ற ஆசிரியரின் குழந்தையின் தொழிற்கல்வி பட்டப்படிப்பு (UG course) பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tuition Fees) அல்லது ரூ.50,000/- இதில் எது குறைவோ, அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு (Diploma course) பயில மற்றும் தொழிற்பட்டயப் படிப்பு(Diploma couma பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை (Tuition Fees) அல்லது ரூ.15,000/- இதில் எது குறைவோ அத்தொகை மட்டுமே தேசிய ஆசிரியர் நிதியில் கைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது..

யாரெல்லாம், எப்போது விண்ணப்பிக்கலாம்?

மேலும் படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சார்ந்த மாவட்டங்களின் முதன்மைக்கல்வி அலுவலகர் மூலமே சமர்பிக்க வேண்டும். முதன்மைக்கல்வி அலுவலர்கள் பெறப்படும் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி இயக்குனருக்கு 10.11.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

என்னென்ன விதிகள்?

தகுதிப்பெற்ற ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு ஒரு முறை மட்டும் இந்தக் கல்வி கட்டணத் தொகை வழங்கப்படும்.அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் தொழிற்கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்ட படிப்பு MBBS, BDS, B.VSC, BE, B.Sc (Agri), B.Sc (Nursing), Bachelor of Law and Three years Diploma Course) பயிலும் மாணவர்களும் இக் கல்வி உதவித் தொகையை பெறத் தகுதி உடையவர்கள் ஆவர்.

விண்ணப்பமனுவில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையான அளவில் சரியாக தமிழில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் விண்ணப்பத்தில் ஆசிரியர் பணிபுரியும் பள்ளி, முகவரி பின் கோடுடன் இருத்தல் வேண்டும். மேலும்,பெற்றோர்களின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.7,20,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றினை விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று தொகுத்து இவ்வியக்ககத்திற்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கால தாமதமின்றி அனுப்பவேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனரால் 10.11.2025க்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் தொழிற்கல்வி படிப்பில் இறுதியாக தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகல்களையும் இணைக்க வேண்டும். அவ்வாறின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தந்தை அல்லது தாய் பணியின் விவரம் மற்றும் அவர்களின் ஊதிய சான்று விபரங்களை கண்டிப்பாக விண்ணப்பத்தில் உள்ள கலத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இறந்து போன ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு இப்படிப்புதவித் தொகை பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

சார்ந்த மாணவ/ மாணவியரின் வங்கி கணக்கு எண் சார்ந்த விவரம் படிவத்தில் பூர்த்தி செய்தும், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் பெற்று இணைக்கவேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து அனுப்பும் பட்சத்தில் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் இணைத்திருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இக்கல்வி உதவித்தொகையை பெறத் தகுதி உடைய ஆசிரியர்கள் இதை பயன்ப்டுத்திக் கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா..!!
குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com