

இந்தியாவில் நடந்து வரும் 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று (வியாழக்கிழமை) அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொண்டது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்திரேலிய அணி 13 புள்ளிகள் எடுத்து முதலிடத்திலும், 7 புள்ளிகள் எடுத்த இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் அலிசா ஹீலி - போப் லிட்ச்பீல்டு களமிறங்கினர். இவர்களில் ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதனை தொடர்ந்து எல்லிஸ் பெர்ரி களமிறங்கினார்.
2-வது விக்கெட்டுக்கு லிட்ச்பீல்டுடன், எலிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்து, இந்திய பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய லிட்ச்பீல்டு 77 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் உலகக் கோப்பை ‘நாக்-அவுட்’ சுற்றில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சிறப்பை 22 வயதான லிட்ச்பீல்டு பெற்றார்.
அணியின் ஸ்கோர் 180-ஆக உயர்ந்த போது இந்த ஜோடியை அமன்ஜோத் கவுர் பிரித்தார். அவரது பந்துவீச்சில் லிட்ச்பீல்டு 119 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அதனை தொடர்ந்த களம் இறங்கிய பெத் மூனி 24 ரன்களிலும், அன்னபெல் சுதர்லண்ட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த பெத் மூனி 24 ரன்னிலும், அனபெல் சுதர்லாண்ட் 3 ரன்னிலும், எலிஸ் பெர்ரி 77 ரன்னிலும், தாலியா மெக்ராத் 12 ரன்னிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அவர்களின் ரன்ரேட் சற்று குறைவது போல் தோன்றிய நிலையில் ஆஷ்லி கார்ட்னெர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை மறுபடியும் எகிற வைத்த அவர் 45 பந்தில் 63 ரன்களை விளாசினார்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வர்மா 10 ரன்னிலும், ஸ்மிர்தி மந்தனா 24 ரன்னிலும் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
3-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்ரேட்டை 6-க்கு குறையாமல் நகர்த்தினர்.
வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களிலும், அடுத்து வந்த தீப்தி ஷர்மா 24 ரன்னிலும் ரன்-அவுட் ஆகி வெளியேறினர்.
இதற்கிடையே ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை ருசித்தார். 6-வது வரிசையில் இறங்கிய ரிச்சா கோஷ், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நெறுக்கி 16 பந்தில் 26 ரன்கள் சேர்த்து நெருக்கடியை குறைத்தார்.
மறுமுனையில் நிலைத்து நின்றதுடன் அட்டகாசமாக ஆடிய ஜெமிமா அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார். இறுதியில் அமன்ஜோத் கவுரின் பவுண்டரியுடன் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பெண்கள் ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். இதற்கு முன்பு இதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக்கில் 331 ரன் இலக்கை ஆஸ்திரேலியா துரத்திப்பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அச்சாதனையை முறியடித்ததுடன், அந்த தோல்விக்கும் இந்தியா சுடச்சுட பதிலடி கொடுத்து இருக்கிறது.
மேலும் பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.
பெண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் கால்பதிப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தது.
வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இதே நவிமும்பையில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
