கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை!

பருவமழை
பருவமழை

தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு ராணிப்பேட்டை, வேலூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்தது வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் 50 மி.மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் முதலில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதன்பின் செங்கல்பட்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னர் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். இதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. வானிலை மையம் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று அறிவித்திருந்த நிலையில் கனமழை பெய்தது. புதுச்சேரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், சிறுசேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த கனமழை பெய்தது.

நள்ளிரவு தொடங்கிய கனமழை விடியற்காலை வரை தொடர்ந்து பெய்து வந்ததால் காலையில் அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com