கடலுக்கடியில் ஒரு மாயச் சாலை: மர்ம தேசத்திற்கு செல்லும் வழித்தடமா?

'Yellow Brick Road'
'Yellow Brick Road' Source: sciencealert.com
Published on

இயற்கை ஒரு மாயை என அறிவோம். அந்த இயற்கை நிகழ்த்தும் அற்புதங்கள் மீதான ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இயற்கையின் படைப்பான கடலின் ஆழமும் பல ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு உலகை வியப்பில் ஆழ்த்தும்.

அப்படி ஒரு கண்டுபிடிப்பு தான் பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில், ஹவாய் தீவுகளுக்கு வடக்கே உள்ள கடல்சார் மலைத்தொடரில், மஞ்சள் நிறச் செங்கற்களால் பரவிய சாலை போன்ற விசித்திரமான அமைப்பு. ஆக்ஸிஜன்‌ இன்றி ஒளியின் சூழல் மங்கியிருக்கும் பசிபிக் பெருங்கடலின் சுமார் 9,843 அடி (≈ 3,000 மீட்டர்) ஆழத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் எதிர்பாராத ஒரு திடுக் காட்சியைக் கண்டனர். ஆம். மர்ம தேசத்திற்குச் செல்லும் வழித்தடம்போல, மஞ்சள் நிறச் செங்கற்களால் ஆன ஒரு சாலை சாத்தியமே இல்லாத கடலடியில் தென்பட்டால் எப்படியிருக்கும்?

2022-ஆம் ஆண்டு 'Ocean Exploration Trust' அமைப்பின் E/V Nautilus ஆய்வுக் கப்பல், லிலியுஒகலானி (Liliʻuokalani Ridge) பகுதியில் ஆழ்கடல் ஆய்வை மேற்கொண்டது. அப்போது, கடலடியில் ஒரு பழைய வறண்ட ஏரியின் தரைப்பகுதி, மனிதர்களால் செதுக்கப்பட்ட மஞ்சள் செங்கற்களால் ஆன பாதையைப் போலவே காட்சியளித்தது. இது 1939-இல் வெளியான 'The Wizard of Oz' திரைப்படத்தில் வரும் பாதையை நினைவூட்டியதால், ஆராய்ச்சியாளர்களால் "மஞ்சள் செங்கல் சாலை" என்று அழைக்கப்பட்டது.

அறிவியல் பின்னணி: “சாலை” அல்லது பாதை போன்ற வடிவில் செங்கற்கள். நிச்சயமாக இது மனிதரால் உருவாக்கியிருக்க முடியாது. ஆனால் இவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பின் காரணம் என்ன?

உண்மையில் இதன் உருவாக்கத்தின் அடிப்படை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் எரிமலை செயல்பாடுகள் மற்றும் வெப்பம்-குளிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சாதாரண புவியியல் செயல்முறைகளின் விளைவு எனக் கண்டனர். இதன் கற்கள்“ஹயலோக்லாஸ்டைட்” (hyaloclastite) எனப்படும் ஒரு வகை எரிமலைப் பாறையால் ஆனவை என்றும், எரிவாயுக்கள் வெளியேறி கடலின் மிக ஆழத்தில் வரும்போது வெப்பம் குளிர்ந்து கற்கள் உடைந்து இருண்ட உருவங்களாக பிரிக்கப்பட்டு 90-டிகிரி கோணத்தில் உடைந்த கற்கள் போன்று ஆழ்கடல் தரை மீது கட்டப்பட்ட ஒரு பாதையை போலவே மாயத் தோற்றம் தருகிறது என முடிவு செய்தனர். இயற்கையின் புவியியல் செயல்பாடுகளால் உருவான ஒரு அற்புதமான, தனித்துவமான தரை அமைப்பாகும் என உறுதி படுத்தப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் கடல் சார்ந்த ஆய்வுகளில் சிறப்பு பெறுகிறது. காரணம் இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றாலும், புவியியல் செயல்களைப் பற்றி மதிப்பிட முடியாத தகவல்களை அளிக்கிறது. இத்தகைய அமைப்புகள், எப்படி உலகின் ஆழ்கடல் தரை உருவாகியது மற்றும் அது இயற்கை மாறுபாடுகளின் விளைவாக எவ்வாறு மாற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன.

உண்மையில், 2025-ம் ஆண்டு வெளியான ஒரு சமீபத்திய புள்ளிவிவரம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட 'பாபஹானோமோகுவாகியா' கடல்சார் பகுதி, அமெரிக்காவின் அனைத்து தேசிய பூங்காக்களையும் ஒன்றிணைத்தாலும் அதைவிடப் பெரியது என்றும் இதுவரை நாம் இதில் 3 சதவீதத்தை மட்டுமே ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது . தாவது மனிதர்கள் ஆராய்ச்சியில் இதுவரை பூமியின் ஆழ்கடல் தரையில் பெரும்பகுதியை இன்னும் அறியவில்லை என்பதே உண்மை.

இந்த அதிசய மஞ்சள் செங்கல் சாலை ஒரு மாயை போல தோன்றினாலும் இன்னும் இது போன்ற அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து பல வினோதமான இயற்கையின் படைப்புகளை கண்டறிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
குட்-பை 24 மணி நேரம்... பூமியின் வேகத்தைக் குறைக்கும் நிலா!
'Yellow Brick Road'

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com