

"நேரம் பொன் போன்றது," "நேரம் யாருக்காகவும் காத்திருக்காது" என்றெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். தினமும் 24 மணி நேரம் போதவில்லை என்று ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, ஒரு மணி நேரம் கூடுதலாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? கற்பனைக்கே இனிப்பாக இருக்கும் இந்த விஷயம், எதிர்காலத்தில் உண்மையாகப் போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆம், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால், வருங்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறப்போகிறது.
மாறும் நிலவு!
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரத்தைத்தான் நாம் 'ஒரு நாள்' என்கிறோம். ஆனால், இந்தச் சுழற்சி வேகம் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை. பூமியின் மிக நெருங்கிய நண்பனான நிலவுதான் இந்த மாற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் கடற்பரப்பை இழுக்கும்போது, அலைகள் உருவாகின்றன.
இந்த அலைகளின் இயக்கம், சுழலும் பூமிக்கு எதிராக ஒரு 'பிரேக்' போலச் செயல்படுகிறது. அதாவது, ஓடிக்கொண்டிருக்கும் வண்டியில் லேசாக பிரேக் பிடித்தால் வேகம் குறைவது போல, நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் மிக மிக மெதுவாகக் குறைகிறது என்று நாசா மற்றும் விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள்.
19 மணி நேரம் மட்டுமே இருந்த நாட்கள்!
பூமியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 19 மணி நேரமாக மட்டுமே இருந்தது. பண்டைய பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் படிமங்களை ஆய்வு செய்ததில், பூமி உருவான காலகட்டத்தில் அது மிக வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. அப்போது ஒரு வருடத்தில் 400 நாட்களுக்கும் மேல் இருந்தன. காலப்போக்கில் வேகம் குறைந்து, அது 24 மணி நேரமாக நிலைபெற்றது.
மனிதர்களின் நேரக் கணக்கீடு!
இயற்கை ஒரு பக்கம் இருக்க, நாம் இன்று பயன்படுத்தும் மணி, நிமிடம், விநாடி கணக்குகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவையே. பண்டைய எகிப்தியர்கள் தான் முதன்முதலில் பகலை 10 மணி நேரமாகவும், விடியல் மற்றும் அந்திப் பொழுதைச் சேர்த்து கணக்கிட்டனர். இரவு நேரத்தை நட்சத்திரங்களின் நகர்வை வைத்து 12 மணி நேரமாகப் பிரித்தனர். அவர்களைத் தொடர்ந்து பாபிலோனியர்கள் 60-ஐ அடிப்படையாகக் கொண்ட கணித முறையைப் பயன்படுத்தி, இன்று நாம் பார்க்கும் துல்லியமான நேரக் கணக்கீட்டை வடிவமைத்தனர்.
எப்போது மாறும்?
பூமியின் வேகம் குறைவது என்பது மிக மிக மெதுவாக நிகழும் ஒரு செயல்முறை. ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு நாளின் அளவு வெறும் 1.7 மில்லி விநாடிகள் மட்டுமே அதிகரிக்கிறது. இந்தச் சிறு துளிகள் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுவதற்கு இன்னும் சுமார் 20 கோடி ஆண்டுகள் ஆகும்.