
நமக்கு பிடிக்காத நபரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு லிஸ்ட்டே வைத்திருப்போம். நாம் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிடிக்காத நபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், நம்மை விட்டுவிட்டு போன காதலி அல்லது காதலன், கடுப்பேத்தும் பக்கத்து வீட்டுக்காரர்கள், எப்போதுமே கேள்வி கேட்டுக் கொல்லும் சொந்தக்காரர்கள் இப்படி நிறைய பேர் இருப்பார்கள்.
இவர்களையெல்லாம் சில சமயம் பார்க்கும் போது அப்படியே முகக்தில் ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். நம் கோவத்தை கட்டுப்படுத்தி அடக்கி வைத்துக் கொள்வோம். இனி அப்படி செய்ய தேவையில்லை. அவர்கள் முகத்திலேயே ஓங்கி குத்துவதற்கு உங்கள் கோவத்தை தீர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
தாய்லாந்தில் மிகவும் பிரபலமான இடம் தான் Sculpture Shop ஆகும். இங்கே உங்களுக்கு பிடிக்காத எந்த நபரையும் அவர்கள் முகத்தில் குத்தி உங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களுக்கு பிடிக்காத நபரின் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை போலவே களிமண்ணில் உருவம் செய்து தரப்படும். அப்பறம் என்ன? உங்கள் கோபம் தீரும் வரை அதை போட்டு அடித்து துவைக்க வேண்டியது தான்.
இங்கு அதிகமாக களிமண் உருவம் செய்யப்படுவது பெரும்பாலும் வேலை செய்யும் இடத்தில் உள்ள உயர் அதிகாரிகளையே என்று சொல்கிறார்கள். களிமண்ணால் செய்திருப்பதால், அடித்ததும் உடைந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக எத்தனை முறை அடித்தாலும் களிமண் உடைந்து விழாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எவ்வளவு வேகமாக அடித்தாலும், களிமண் சிலை விழாமல் உங்கள் அடியை தாங்கிக் கொள்ளும்.
உங்களுக்கு வேண்டுமென்றால், இந்த களிமண் சிலையை நீங்கள் வீட்டிற்கு வாங்கிக் கொண்டு செல்லலாம். வீட்டில் வைத்து அடி பிண்ணி எடுக்கலாம். இந்த வித்தியாசமான கடை தாய்லாந்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. மக்கள் தங்களுக்கு பிடிக்காத நபரின் மீது இருக்கும் கோபத்தை இதுப்போன்ற களிமண் சிலைகள் மீது காட்டி விடுவதால், உண்மையாக அந்த கோபத்தை யாரிடம் வெளிக்காட்ட வேண்டும் என்று நினைத்தார்களோ அந்த நபர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இதுப்போன்ற சிலைகளை அடிப்பது தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த ஒரு வடிகாலாக அமைகிறது என்றும் கோபத்தை போக்கி அமைதியை உணர்வதாகவும் கூறியிருக்கிறார்கள். இது நம் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க நல்ல முறையில் உதவுகிறது.
இந்தியாவில் இதுப்போன்ற கடையை திறந்தால் முதல் நாளே ஹவுஸ்புல்லாக இருக்கும். என்ன நான் சொல்வது சரிதானே?