
சுங்கச்சாவடிகளில் பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதற்காக ஃபாஸ்ட் டேக் நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து நான்கு சக்கர கனரக வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது.
இப்போதிருக்கும் நடைமுறையில் ஃபாஸ்ட் டேக் இல்லாமலோ அல்லது எக்ஸ்பைரி ஆன ஃபாஸ்ட் டேக்குகளுடன் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடமிருந்து பொதுவான சுங்கச்சாவடி கட்டணத்தைவிட, இரண்டு மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக,ஃபாஸ்ட் டேக் இருக்கும் காருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டால், அது இல்லாத கார் ரூ.200 செலுத்த வேண்டும்.
தற்போது ஃபாஸ்ட் டேக் இல்லாத மற்றும் செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்தும் நடை முறையில் புதிய நடைமுறையை மத்திய அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய நடைமுறையின்படி, ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத ஃபாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்கள் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் இனி 2 மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
வருகிற நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறையின் மூலம் அவர்கள் 1.25 மடங்கு கட்டணத்தொகையை மட்டுமே செலுத்த வேண்டும். சுங்கச்சாவடிக் கட்டணத்தை யு.பி.ஐ மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு ரூ.125 மட்டுமே செலுத்தினால் போதும்.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.