

ஹார்முஸ் நீரிணையில் உள்ளதாக சொல்லப்படும் கன்னிவெடிகளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் ஈரானால் நீரிணையை முழுமையாக திறக்க முடியாது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வந்த அமெரிக்க ஈரான் இடையிலான மோதல் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தான் தலையீட்டால் இஸ்லாமாபாத்தில் ஈரான் அமெரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கியமான நிபந்தனையாக உள்ள நிலையில் பேச்சு வார்த்தை சுமூகமாக நிறைவு பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உலக கடல் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளாவிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியைப் பாதிக்கும் என்பதால் நீரிணையைத் திறக்க அமெரிக்கா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் ஈரான் நீரிணையைத் திறக்கும் அனுமதியை வழங்காமல் மறுத்து வருகிறது. ஈரானின் மறுப்பின் பின்னணி போர் நிமித்தம் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள்தான் என்பதற்கான விளக்கம் தற்போது கிடைத்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் உள்ள பிரபலமான செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, ஹார்முஸ் நீரிணையில் இந்த கண்ணிவெடிகள் திட்டமிடாமல், சீரற்ற முறையில் ஈரான் பதித்துள்ளதாகவும் ஈரான் வைத்துள்ள சில கண்ணி வெடிகள் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல், நீரின் ஓட்டத்தால் மிதந்து நகரக்கூடிய வகையில் இருந்ததாகவும் இதனால் அதன் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிவது கடினமாகியுள்ளது என்றும் தெரிகிறது.
ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க உலக நாடுகள் காத்துள்ளது.