தலைநகர் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கிண்டி ரேஸ் கோர்ஸ் திகழ்கிறது. 1946ஆம் ஆண்டில் கிண்டி ரேஸ் மைதானத்திற்காக 99 ஆண்டுகள் போடப்பட்ட ஒப்பந்தம் 2045ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இதற்கிடையில் குத்தகை மாற்றம் செய்யப்பட்ட நிலுவை தொகையை செலுத்தாமல் கிண்டி ரேஸ் கிளப் பாக்கி வைத்துள்ளது. பாக்கி வைக்கப்பட்ட தொகை 820 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணை விறுவிறுப்பாக நடந்து வந்தது. இச்சூழலில், கடந்த 6ஆம் தேதி அன்று பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவின்படி, கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கிண்டி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய தாசில்தார்கள் நேரில் வருகை புரிந்து சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை பொறுத்தவரை மொத்தம் 160 ஏக்கர் கொண்டது. அதில் 80 ஏக்கரில் தான் குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டு வந்தன. ரேஸ் கோர்ஸில் உள்ள திருமண மண்டபங்கள், நீச்சல் குளங்கள், சொகுசு விடுதிகள் ஆகியவை தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மேலும், சென்னையில் கிண்டி ரேஸ் கிளப்பில் அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் 118 ஏக்கர் நிலத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்திய அளவிலும், உலக அளவிலும் இந்த அளவுக்கு மக்கள்தொகை கொண்ட மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் உள்ள பூங்காக்களின் பரப்பு மிகவும் குறைவு. அதனால், சென்னையில் மிகப்பெரிய பூங்காக்களை அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கை பொது மக்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் அதையேற்று கிண்டியில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அரசு அமைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
’’சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 விழுக்காடாகத் தான் உள்ளது."
தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டாலும் கூட சென்னையின் பசுமைப்பரப்பு பிற நகரங்களுக்கு இணையாக இருக்காது. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களுக்கு இணையாக சென்னையின் பசுமைப்பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்காக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும்.
எனவே, சென்னையில் கிண்டி பூங்கா தவிர, கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் அமைந்துள்ள 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா அமைந்துள்ள 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் கிடைக்கும் மொத்தம் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொது மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.