இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Second World Tamil Classical Conference: Chief Minister M.K.Stalin announcement
Second World Tamil Classical Conference: Chief Minister M.K.Stalin announcement
Published on

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியால் முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கடந்த 2010ம் ஆண்டு கோவை மாநகர், கொடிசியா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது அவர் வழியில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த வருடம் ஜூன் மாதம் தலைநகர் சென்னையில் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டிருக்கும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில்,

“இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை - தனித்தன்மை - பொதுமைப் பண்பு - பண்பாடு - உயர்ந்த சிந்தனை - இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.

தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம் பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் கலைஞர். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் இந்த அரசின் முயற்சிகளாகும்.

இதையும் படியுங்கள்:
ஊட்டி: தேனீக்கள் விரட்டியதால் சுற்றுலாவாசிகள் சிதறி ஓட்டம்... ஒருவரைக் காணாததால் தேடும் பணி தீவிரம்!
Second World Tamil Classical Conference: Chief Minister M.K.Stalin announcement

மேலும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி, 12ம் நாளினை, ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாக 2024ம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம்.

‘இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும்” என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com