பங்களாதேஷில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இதனால், இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனால், காலவரையற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருக்கும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், எதாவது பிரச்சனை என்றால், +88-01313076402ஐத் தொடர்பு கொள்ளவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவலாம் என அஞ்சப்படுகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய - வங்கதேச எல்லையில் 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ள அனைத்து அமைப்புகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் படையை குவிக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்டரில் உள்ள படையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து களத் தளபதிகளும் பணியில் இருக்குமாறும், அனைத்துப் பணியாளர்களும் உடனடியாக எல்லைப் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.” என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையிலான தூரம் 2 ஆயிரத்து 217 கிலோ மீட்டர். மேலும் திரிபுரா மாநிலம் 856 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மேகாலயா 443 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அசாம் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மற்றும் மிசோரம் 318 கிலோ மீட்டர் தூரத்திற்கும் பங்களாதேஷுடன் எல்லைகளை பகிர்ந்துக் கொள்கிறது.