

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். புதிய டிஜிபியாக தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜீவ் குமார், காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் புதிய டிஜிபி தேர்வு செய்வதில் மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்புவதில் அரசு ஆர்வம் காட்டாமல் இருந்தது. எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து புதிய டிஜிபி தேர்வு செய்ய பட்டியல் அனுப்பப்பட்டது. ஆனால் இவர்கள் கூறிய நபர்களை மத்திய அரசு ஏற்கவில்லை; மத்திய அரசு கூறிய நபர்களையும் தமிழக அரசு ஏற்க முன்வரவில்லை. இதனால் டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை.
புதிய டிஜிபி நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். தமிழக காவல்துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு அடுத்த மாதம் புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ளார். அதில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது - பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக பொறுப்பு டிஜிபி பதவியில் இருக்கும் வெங்கடராமன் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக எளிதான பணி தேவைப்படுகிறது என்றும், ஜனவரியில் டிஜிபியாக பதவி உயர்வு பெறும் டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக நியமிக்கப்பட்டால், சட்டசபை தேர்தல் நேரத்தில் அவரை தேர்தல் கமிஷன் மாற்ற வாய்ப்பு உள்ளது. எனவே அவரை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பணி அமர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ரேசில் டாப்பில் இருக்கும் சீமா அகர்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த இவர், தமிழகத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் டிஜிபியாக இருக்கும் இவரின் கணவர் சென்னை முன்னாள் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆவார். சீமா அகர்வால் தமிழக டிஜிபியாகப் பொறுப்பேற்றால், லத்திகா சரணுக்குப் பிறகு தமிழகத்தின் இரண்டாவது பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெறுவார்.