

தாறுமாறான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனால் பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தமிழக அரசால் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
பல ஏழைக் குடும்பங்களில் ஒரு நாள் உணவுக்கான தொகையை, காய்கறிகள் வாங்குவதற்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை தவிர்த்து விட்டு சமையல் செய்வது என்பதும் சாத்தியமில்லை.
பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.
தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் விற்பனை விலை இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி தற்போது கிலோ 120 ரூபாயை நெருங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப் பட உள்ளது.
கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை தற்போது 120 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும். சீரான விலையை உறுதிசெய்ய தொலைநோக்கு திட்டம் தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.