செம்மொழி பூங்கா மலர் கண்காட்சி 2-ந்தேதி தொடக்கம் - ஜனவரி 18-ம் தேதி வரை நடக்கிறது!

Semmozhi park
Semmozhi park
Published on

சென்னை நகரின் மையத்தில் தமிழக அரசின் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல செம்மொழிப் பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.

அரிய வகை மரங்களும் உள்ளன. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஏராளமான உயிரினங்களுடன், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தாவரங்கள் அதன் பன்முகத்தன்மையை பராமரிக்க பூங்காவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பூங்காவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயர், தாவரவியல் பெயர் ஆகியவை அதன் அருகே எழுதி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள போன்சாய் மரங்கள், வண்ண விளக்குகள் நிறைந்த நீருற்று, நீரோடை, குற்றாலத்தை நினைவூட்டும் அருவி, வாத்துகள் வாழும் குளம் ஆகியவை இப்பூங்காவின் சிறப்பம்சங்கள். இப்பூங்காவைச் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும்.

இதையும் படியுங்கள்:
மேய்ச்சல் நிலங்களைக் காப்பதன் அவசியம் என்ன தெரியுமா?
Semmozhi park

பூங்காவின் உள்ளே ஒன்றே கால் மீட்டர் தூரம் நடந்தால்தான் அனைத்தையும் கண்டு ரசிக்க முடியும். வேகமான நவீன உலகில் இருந்து ஒரு கல்விப் பயணம் அல்லது இயற்கையை ரசிக்க இது ஒரு சிறந்த இடமாகும். பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த தோட்டத்திற்கு வார நாட்களில் சராசரியாக 400 பேரும் வார இறுதி நாட்களில் 1,000க்கும் அதிகமானவர்களும் வந்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இந்த பூங்கா. இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு பூத்துக்குலுங்கும் மலர்களுடன் செம்மொழி பூங்கா தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் 10 நாட்கள் நடந்த மலர் கண்காட்சிக்கு மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியை வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது.

இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. ஓசூரில் இருந்து பிரத்யேக ரோஜா செடிகள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும் வேளாண்மைத் துறையின் தோட்டக்கலைத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் கொண்டு வரப்படுகிறது.

வருகிற 2-ந்தேதி இம்மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை நடக்கும் மலர் கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது!
Semmozhi park

மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150ம், சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தற்போது மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரமாக நடந்துவருவதால் பூங்காவுக்குள் செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com