

குதிரை பேரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவல்துறையினர் தேடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவுக்கு மாறும்படி தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தவெக ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் வலை வீசி தேடுகின்றனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீசார் கரூரில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக கரூரில் உள்ள அசோக்குமாரின் வீடு மற்றும் சென்னையில் அவர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து தினம் தினம் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒட்டுமொத்தமாக தவெகவிற்கு சென்றதுடன் நில்லாமல், திமுகவை மோசமாக விமர்சிக்கவும் தொடங்கியுள்ளது. அடுத்து அதிமுகவிலும் உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த திருப்பமாக தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுக சதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் பேரம் பேசி உள்ளனர்.
தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இது தொடர்பாக என். இளையராஜா என்னும் தவெக எம்எல்ஏ, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் திருச்சியைச் சேர்ந்த நரேஷ் போன்றவர்களை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மேலும் இந்த சதியில் திமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீசார் கரூரில் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அசோக் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தேடி வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அசோக்குமார் சென்னையில் சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் தான் குதிரை பேரத்தில் ஈடுபடுமாறு சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் குதிரை நேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்திய பொழுது ரமேஷ் வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரூரில் உள்ள இடங்களில் செந்தில் பாலாஜியையும் தனிப்படை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.