

வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகமும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 4, 2026) தஞ்சாவூரில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கியூ ஆர் கோடுடன் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த கூட்டம் தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக, நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வரை விஜய் பயணம் செய்தார். விஜயின் வருகை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர், தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போதே விஜயின் வாகனத்தை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விஜயின் வாகனம் செங்கிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது , ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக அவரை தொடர்ந்து வந்தனர். அவர்கள் சாலை விதிகளை மீறி , ஹெல்மெட் எதுவும் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு சில வாகனங்கள், கட்டுப்பாட்டையை இழந்து, அருகே சென்ற வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி 5 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய விஜய் ரசிகர்களை ரசிகர்களில் விக்னேஷ் என்ற ஒரு இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்த இளைஞரை, அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயம் அடைந்த விக்னேஷிற்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த மற்றொரு நபருக்கு காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்ற சிலருக்கு உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.தஞ்சாவூர் மட்டுமல்ல விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து இதற்கு முன்னரும் ஒரு சில இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இந்த விபத்தில் ரசிகர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் ஏற்கனவே பலமுறை "ரசிகர்கள் தனது வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொள்ளும் பல கூட்டங்களிலும் ரசிகர்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறும் , சாலைகளில் தன் வாகனத்தை பின் தொடரக் கூடாது" என்றும் கடுமையாக எச்சரித்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் தஞ்சாவூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.