திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க திண்டுக்கல்லில் இருந்து சப்ளை செய்யப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது என 'நேஷனல் டைரி டெவலப்மெண்ட் போர்டு' ஆய்வக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை அறியாமல் கொண்டு சென்ற செயலுக்கு பரிகாரம் காண்பதற்காக கோயில் தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள், ஆகியோருடன் தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது கோயிலுக்குள் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய நெய் எடுத்துச் செல்லப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. அதன் பின்னர் இது போன்ற தவறுகளுக்கு பரிகாரம் காணும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பரிகார பூசையான பவித்ரோசவம் நடத்தப்பட்டது. எனவே புதிய பரிகார பூஜை நடத்த தேவையில்லை என ஆகம சாஸ்திர ஆலோசகர்கள் எடுத்துக் கூறினர். ஆனாலும் பக்தர்களின் மனநிலை, நம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் தேவஸ்தானத்திற்கு இருந்தது.
நேற்று (23ஆம் தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி 10 மணி வரை கிட்டத்தட்ட 4 மணி நேரமாக ஏழுமலையான் கோயிலுக்குள் சாந்தி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் ஜியர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், தலைமை அர்ச்சகர், ஆகம சாஸ்திர நிபுணர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று காலை சென்றனர். தொடர்ந்து கோயில் உள்ள யாகசாலையில் ஜீயர்கள்_ ஆகம சாஸ்திர நிபுணர்கள் மேற்பார்வையில் வேத பண்டிதர்கள் யாகம் நடத்தினர்.
கோயில் முழுவதும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, தூபம் போடப்பட்டது. அதேபோல் பிரசாத தயாரிப்புக் கூடங்கள்_ லட்டு விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, தூபம் போடப்பட்டது. இத்துடன் சாந்தியாகம் நிறைவடைந்தது. மிகப் பழமையான கோவில்களில் குடிகொண்டுள்ள இறை மூர்த்திகளில், மூலமூர்த்தியிடம் இருந்து எப்போதும் நேர்மறை சக்தி வெளிப்படும். அது எப்போதும் தொடர்ந்து வெளிப்பட வேண்டும். அதன் மூலம் அந்த கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் பொறுத்தவரை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடும் போது பக்தர்களுக்கு மெய் மறக்கும் நிலை ஏற்படும். இது பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும் அனுபவம். ஏழுமலையான் கோயிலில் இருக்கும் மூலமூர்த்தியிடம் இருந்து பெருமளவிலான நேர்மறை சக்தி வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. சாமி கும்பிடுவதற்காக செல்லும் போது அலைக்கற்றை நம் உடலில் புகுந்து மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை மொத்தமாக ஏற்று தாங்கிக் கொள்ளும் நமது மூளை, தானாகவே தன்னை புதுப்பித்துக் கொள்ளும். இந்த நிகழ்வு நடக்கும் போது, மெய்மறக்கும் நிலை ஏற்படும். எனவேதான் ஏழுமலையானை பக்தர்கள் வழிபடும் போது அவர்களுக்கு மெய் மறந்த நிலை ஏற்படுகிறது.
கோயிலுக்குள் சாஸ்திர விரோத செயல்கள் நடந்தால் மூல விக்கிரகத்தில் இருந்து வெளிப்படும் நேர்மறை சக்தி அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத தயாரிப்பில் நடந்த இந்த நிகழ்வு சாஸ்திர விரோதமானது என கருதப்படுகிறது. இதனால் ஏழுமலையான் விக்ரகத்தில் இருந்து வெளிப்படும் சக்திக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே சாந்தியாகம் நடத்தப்பட்டதாக ஆகம பண்டிதர்கள் கூறுகின்றனர்.