சமீபத்தில் ஆந்திராவில் ஜனசேனா மற்றும் பாஜக ஆதரவோடு ஆட்சியை பிடித்த தெலுங்குதேச கட்சி, முந்தைய அரசான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மீது தொடர்ச்சியாக ஊழல் புகார்களை அடுக்கிக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன முறைக்கேட்டில் ஓய்.எஸ்.ஆர் காங் கட்சியின் முன்னாள் அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமலை கோவில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆண்டுதோறும் பல நூறுகோடி ரூபாய் மதிப்பில் நெய் வாங்கப்படுகிறது. சில ஆண்டுகளாக திருமலைக்கு வரும் பக்தர்கள் மஹா பிரசாதமான லட்டுவில் சுவை மாறுபட்டு இருப்பதாகவும் அதன் மணமும் மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும் அடிக்கடி தேவஸ்தானத்தில் புகார் கூறி இருந்தனர். அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் வழக்கமாக கர்நாடக பால் கூட்டமைப்பில் நெய் வாங்குவதை அரசு மாற்றி இருப்பதால் சுவையில் மாறுபாடு உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "கடந்த ஐந்து ஆண்டுகால ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயிலின் பிரசாதத்தில் பசு நெய்யிற்கு பதிலாக விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டு கோவிலின் புனிதத்தினை கெடுத்துள்ளார். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்து தரமற்ற பொருட்களை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு கோவில் பிராசாதத்தில் ஊழல் செய்தது மட்டும் அல்லாமல் அதில் விலங்கு கொழுப்பை கலந்ததற்கு ஜெகன் மோகன் வெட்கப்பட வேண்டும் இதற்கு அவமானப்பட வேண்டும். நாங்கள் இப்போது தூய நெய்யை பயன்படுத்துகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்" எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான ஒய்.வி.சுப்பாரெட்டி, “சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கெடுத்துள்ளார். திருமலை பிரசாதம் குறித்த அவரது கருத்துகள் மிகவும் தவறானது. யாரும் இது போன்ற வார்த்தைகளை பேசவோ, குற்றச்சாட்டுகளை கூறவோ முன்வர மாட்டார்கள். சந்திரபாபு அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபுவின் குற்றச்சாட்டுகள் பொய் என நானும் எனது குடும்பத்தினரும் திருமலையில் ஏழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்து சத்தியம் செய்ய தயாரா?" என்று கேட்டுள்ளார்.
சந்திரபாபுவின் குற்றச்சாட்டை, திருப்பதி லட்டை ஆய்வு செய்த ஆய்வகம் உறுதி செய்துள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி (NDDB CALF) ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது, அதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியவை கலந்துள்ளது ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா பால் கூட்டமைப்பு சங்கம் இது பற்றி தெரிவிக்கையில் கடந்த பல ஆண்டுகளாக தங்களிடம் தான் தரமான நெய்யை திருமலை தேவஸ்தானம் கொள்முதல் செய்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எங்களிடம் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்திருந்தாக கூறினர்.
இது பற்றி அமைச்சர் நாரா லோகேஷ் திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை கலப்படம் செய்து கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை ஜெகன் மோகன் இழிவு படுத்தியுள்ளார் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யை ஆய்வுக்கூடத்தில் சோதித்து பார்த்தபோது, தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.