
பங்குச் சந்தையில என்ன நடக்குதுன்னு பாத்தீங்களா? ஒரு பக்கம், பெரிய பெரிய ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இழந்துட்டு வர்றாங்க.
ஆனா, இன்னொரு பக்கம், சில புரோக்கிங் நிறுவனங்கள் மட்டும் புதுசா நிறைய வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கிட்டே போறாங்க. என்ன காரணம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவுக்கு, கடந்த ஆண்டு செபி (SEBI) அறிமுகப்படுத்திய கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் பங்கேற்பு கடுமையாகக் குறைந்ததுதான் முக்கிய காரணம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிஸ்கவுன்ட் புரோக்கிங் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன.
இந்தியாவின் முன்னணி நான்கு நிறுவனங்களான குரோ, ஜெரோதா, ஏஞ்சல் ஒன், மற்றும் அப்ஸ்டாக்ஸ் இணைந்து, ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தன.
இதன் மூலம், இந்த நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இழந்த 20 லட்சம் வாடிக்கையாளர்களுடன் சேர்த்து, ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை மொத்தமாக 26 லட்சம் தீவிர முதலீட்டாளர்களை இழந்துள்ளன.
மிரே அசெட் கேபிடல், ஃபோன்பே வெல்த், ஷேர்கான், கோடக் செக்யூரிட்டீஸ் மற்றும் மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் உள்ளிட்ட மற்ற புரோக்கிங் நிறுவனங்களும் ஜூலை மாதத்தில் வாடிக்கையாளர் சரிவைச் சந்தித்தன.
ஆச்சரியமா, இந்த சரிவில் சில புரோக்கிங் நிறுவனங்கள் மட்டும் தப்பிச்சுட்டாங்க. ஜூலை மாசத்துல, SBI செக்யூரிட்டீஸ் கிட்டத்தட்ட 33,800 வாடிக்கையாளர்களை புதுசா சேர்த்திருக்கு. அதேபோல, பேடிஎம் மணி சுமார் 22,100 பேரையும், ICICI செக்யூரிட்டீஸ் சுமார் 10,800 பேரையும் சேர்த்திருக்கு.
இவங்களை தவிர, ஆரித்யா புரோக்கிங், சாய்ஸ் ஈக்விட்டி புரோக்கிங், மணிவைஸ் ஃபின்வெஸ்ட், மற்றும் ஜைனாம் புரோக்கிங் போன்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த விதிகளில், வர்த்தகம் செய்யத் தேவையான அதிகபட்ச தொகை, குறைவான வாராந்திர காலாவதி நாட்கள், அதிக மூலதன வரம்பு மற்றும் அதிக வரி ஆகியவை அடங்கும். இவை அனைத்தும், சில்லறை முதலீட்டாளர்களின் ஆர்வத்தைக் குறைத்துவிட்டன.
சிலர் என்ன சொல்றாங்கன்னா, இப்ப மக்கள் மியூச்சுவல் ஃபண்ட், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் (PMS) மற்றும் ஆல்டர்நேடிவ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் (AIFs) மாதிரி, தொழில்முறை நிபுணர்கள் நிர்வகிக்கிற முதலீட்டுத் திட்டங்களை நோக்கிப் போறாங்க. அதனாலதான், தனிப்பட்ட புரோக்கிங் கணக்குகள் குறையுதுனு சொல்றாங்க.