தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு என்ற முழக்கம் ஒத்து வராது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சென்னையில் இந்தியா டுடே (India Today) நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது; இது எங்களுக்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக - காங்கிரஸ் இணைந்தே சந்திக்கும் என்றும், ஆட்சியில் பங்கு என்ற பேச்சே எழவில்லை என்றும் குறிப்பிட்டார். "ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்குப் பொருந்தாத கோரிக்கை. அது எங்களைவிட காங்கிரசுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதைப் பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி இது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தச் சிலர் முயற்சி செய்கிறார்கள்" என்று கூறினார்.

"எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் வெல்லும். திமுக - காங்கிரஸ் இடையே எந்தக் குழப்பமும் இல்லை; இணக்கமாகவே உள்ளது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராகப் பார்க்கிறேன்; அவரும் என்னைப் அப்படியேதான் பார்க்கிறார். கூட்டணியில் முறிவு ஏற்படுத்துவதற்காகச் சிலர் கிளப்பிவிடும் வதந்திகள் எடுபடாது" என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தல் கடினமாக இருக்காது எனக் குறிப்பிட்ட அவர், "நாங்கள் பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்தே மக்களிடம் வாக்கு கேட்போம். திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், மத்திய அரசு பல வழிகளில் நெருக்கடிகளைக் கொடுத்துத் துரோகத்தையும் அநீதியையும் இழைத்து வருகிறது. தமிழக அரசின் 'தோழி' விடுதி திட்டத்தைத்தான் மத்திய அரசு தற்போது பின்பற்றுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மத்திய அரசால் மறைக்க முடியாது" என்றார்.

உலக அரங்கில் தமிழ்நாடு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், எலக்ட்ரானிக்ஸ், மோட்டார் வாகனம், ஐடி, ஜவுளித்துறை எனப் பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும், இது தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மாநிலம் முன்னிலை வகிப்பதைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

அரசியலில் சுறுசுறுப்பாக இருப்பதற்கான காரணம் குறித்த கேள்விக்கு, "அரசியல் களத்திற்கு வந்தது முதல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். கலைஞர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரே பாடம் 'உழைப்பு' தான்; அதைத்தான் உதயநிதிக்கும் சொல்லி வருகிறேன்" எனப் பதிலளித்தார்.

இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தங்களுக்கு ஒரு 'பூஸ்ட்' (Boost) போன்றது என்று குறிப்பிட்ட முதலமைச்சர், "அந்தக் கருத்துக்கணிப்பை உண்மையாக்குவோம். 3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பான்மையான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், தற்போது திமுக-விற்கும் அதிமுக-விற்கும் இடையே 12% வாக்கு வித்தியாசம் உள்ளது. உங்களின் தேர்தல் முடிவுகளை திமுக கூட்டணி மெய்ப்பிக்கும்" என்று பேசி முடித்தார்.

இதையும் படியுங்கள்:
தூசி தட்டப்படும் பழைய காவியங்கள்: இது வியாபார தந்திரமா? அல்லது தரமான கதைகளின் தேவையா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
logo
Kalki Online
kalkionline.com