

சென்னையில் 19 கிலோ வணிய பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.66.50 அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 10 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 66.50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன. சில மாதங்களில் திருத்தம் ஏற்படாமலும் இருப்பதுண்டு.
அதன்படி, தற்போது சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்பிஜி (Domestic LPG) சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.957.50க்கும், 19 கிலோ எடைக் கொண்ட வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் (Commercial Cylinder) ரூ. 2,916.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% க்கும் மேல் இறக்குமதியையே சார்ந்து உள்ளது.
உலகளாவிய அரசியல் பதற்றம் அல்லது உற்பத்தி குறைப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும். தற்போது, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையில் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே வந்தது. அதனை தொடர்ந்து சிலிண்டருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்தது.
இதனிடையே மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததன் காரணமாக, ஜூன், ஜூலை மாதங்களில் அதிரடியாக உயர்ந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, கடந்த ஆகஸ்ட் மாதம் 200 ரூபாய் வரை விலை குறைந்தது. ஆனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி சென்னையில் வழக்கம் போல் ரூ.957.50க்கே விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 66.50 ரூபாய் உயர்ந்து 2,983 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 10 ரூபாய் அதிகரித்த நிலையில் இந்த மாதம் (அக்டோபர்) ரூ.66.50 அதிகரித்துள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.