ராஜஸ்தான் மாநிலத்தில் அல்வார் என்ற இடத்தில் கட்டடக்கலை நிபுணர் ஷிப்ரா சிங்கானியா மற்றும் அவரது கணவரின் தாயார் சுனிதா சங்கி ஆகியோர் இணைந்து மண், சிமண்ட் இல்லாமல் வெறும் வெல்லம் , வேப்பிலை மற்றும் மெத்தி பயன்படுத்தி ஒரு அழகிய வீட்டை கட்டியுள்ளார்கள்.
மும்பையைச் சேர்ந்த ஷிப்ரா சிங்கானியா ராஜஸ்தானில் திருமணம் செய்துக்கொண்டார். இவரும் இவர் மாமியாரும் இயற்கையை மிகவும் ரசிப்பவர்கள். எப்போதும் நெரிசலாக இருக்கும் நகர வாழ்க்கையிலிருந்து வெளிவர, அல்வாரில் உள்ள பார் கேஷ்பூர் என்ற கிராமத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்ட திட்டம் தீட்டினர். கட்டடக் கலை நிபுணரான ஷிப்ரா 2014ம் ஆண்டிலிருந்து கட்டடக் கலை நிபுணராக வேலைச் செய்து வருகிறார்.
அந்தவகையில் 2020ம் ஆண்டு ஒருவர் ஃபார்ம் வீடு பற்றிய டிசைனை ஷிப்ராவிடம் கேட்டிருக்கிறார். அப்போதுதான் ஷிப்ராவுக்கு ஒரு யோசனை வந்தது. இயற்கைக்கு நடுவில் வீடுக் கட்டுவதை விட இயற்கை வைத்தே வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறார். அதனை முயற்சி செய்துப் பார்க்க வேண்டும் என்று கூறி மாமியார் சுனிதாவிடம் கூறியிருக்கிறார்.
அதன்பின்னர்தான் ஆல்வாரில் வாங்கிய அந்த நிலத்தின் தன்மையையும் அந்த இடத்தின் காலநிலையையும் ஆராய்ச்சி செய்துப் பார்த்திருக்கிறார். இயற்கை வீடு கட்டினால் அந்த மண்ணில் நிலையாக நிற்குமா என்று சோதனை செய்துப் பார்த்துள்ளார். அந்த இடத்தின் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குளிர்காலத்தில் 8 டிகிரி செல்சியஸில் இருக்கும். காற்றுக்கும் குளிருக்கும் தாங்கும் வகையில் வீடு எழுப்ப வேண்டுமென்று பல திட்டங்களைத் தீட்டினார்கள். அந்தவகையில் 2021ம் ஆண்டு இந்த இயற்கை வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது.
யார் உதவியும் இல்லாமல் ஷிப்ரா மற்றும் சுனிதா இருவருமே சேர்ந்து இந்த வீட்டைக் கட்டி முடித்தனர். வெல்லம், வேப்பிலை மற்றும் மெத்தி பயன்படுத்திக் கட்டப்பட்ட இந்த வீட்டின் சில இடங்களில் சுண்ணாம்பு மற்றும் களிமண் ஆகியவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் மழைநீர் சேகரிப்பு தொட்டியும் கட்டினார்கள். மேலும் வீட்டை சுற்றி நிறைய தாவரங்கள், மரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர். அவர்கள் உணவுக்கு பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கடையில் வாங்காமல் இந்த வீட்டைச் சுற்றியே சொந்தமாக வளர்த்து வருகிறார்கள்.
வார நாட்களில் அவர்களுடைய முதல் சொந்த வீட்டில் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த இடத்திற்கு வந்து வார இறுதியை இயற்கையோடு கழிப்பார்களாம்.