

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பல முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை இழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வேலை இழப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனமான அமேசான், இன்று முதல் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஐடி நிறுவனங்களில் வேலையிழப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஊழியர்கள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதே ஒரே வழி எனவும் அவர்கள் அறிவுரைத்தனர்.
அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 30,000 ஊழியர்களின் பணி நீக்கம் என்பது, கிட்டத்தட்ட 10% ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் போது ஆன்லைன் டெலிவரி சூடு பிடித்தது. அச்சமயத்தில் அமேசான் நிறுவனம் அதிக அளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்தியது. அதன் பின்பு உலகம் முழுக்க ஊரடங்கு முடிந்து சாதாரண நிலைக்கு திரும்பியதும், கொஞ்சம் கொஞ்சமாக பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியது அமேசான் நிறுவனம.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை தகவல் தொடர்பு மற்றும் பாஸ்காஸ்டிங் பிரிவுகளில் சுமார் 27,000 பணியாளர்களை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையானது, முன்பை விட அதிகமாக உள்ளது. இதனால் அமேசான் ஊழியர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையின் ஈடுபடுவதற்கான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை முதன்மையாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதோடு ஓடிடி தளம், க்ளைட் கம்ப்யூட்டிங் மற்றும் ஆன்லைன் விளம்பரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நேரத்தில் அமேசானில் அதிகப்படியான ஊழியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். தற்போது நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, மறுகட்டமைப்பு செய்ய இருப்பதால் இன்று முதல் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமேசான் மட்டுமல்லாது பல முன்னணி நிறுவன ஊழியர்களும், தற்போதைய காலத்திற்கேற்றவாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தொடர்ந்து பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.
ஆகையால் விரைந்து ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதோ அல்லது சுயதொழில் செய்வதோ என ஊழியர்கள் தங்கள் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.