
தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான வால்பாறை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் அமைந்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கும் வகையில், சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்த சென்னை ஐகோர்ட்டு கொரோனா காலத்தில் வழங்கியதை போல இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதற்கு இ-பாஸ் பெறும் நடைமுறையை அரசு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சுற்றுலா ஒழுங்கையும் கருத்தில் கொண்டு, வால்பாறை பகுதியில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் E-PASS நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் போலவே, வால்பாறைக்கும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இ-பாஸ் மூலம் அனுமதி சீட்டை பெற்றே அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மற்றும் கொடைக்கானலை விட டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை ஆகிய பகுதிகள் சுற்றுசூழல் ரீதியாக முக்கியமானவை என்பதால் வால்பாறை பகுதிக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பில் மூலம் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இனிமேல் முன்கூட்டியே தமிழக அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம். இ-பாஸ் பெற வாகன விவரங்கள், பயணிகள் எண்ணிக்கை போன்றவை பதிவு செய்தால் அனுமதி வழங்கப்படும். இ-பாஸ் நடைமுறைப்படுத்தபடுவதன் மூலம் கட்டுப்பாடற்ற சுற்றுலா தடுக்கப்படுவதுடன் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும் எனக் கருதப்படுகிறது.