கோடை விடுமுறையால், சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வதால், கூட்டத்தைக் குறைப்பதற்கு பயணிகள் இ பாஸ் வாங்க வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இன்றிலிருந்து இ பாஸ் பெறுவதற்கான வசதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் கொடைக்கானல் , ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இ பாஸ் முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கான இணைய தள முகவரியை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களான கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலுமிருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்றனர்.
இப்படி அவர்களின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் அவ்விருவிடங்களுக்கும் வருகை தரும் பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், அவர்கள் வரும் நாள், தங்கும் இடம், கால அளவு போன்றவற்றை மூன்கூட்டியே இணையத்தில் மூலமாகத் தெரிவித்து இ பாஸ் பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர்கள் கண்டிப்பாக இ பாஸ் வைத்திருப்பது அவசியம்.
மேலும் அந்த இடங்களுக்கு வருகை தருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவலை தெரிவித்து மே 6ம் தேதி காலை 6 மணி முதல் (அதாவது இன்றிலிருந்து) இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டு பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
இந்த நடைமுறையால், வாகனங்களை முறைப்படுத்தி, சுற்றுலா பயணிகள் எளிதாக செல்ல முடியும். சம்பதப்பட்ட ஆட்சி தலைவர்கள் இந்த நடைமுறையை நேற்றிலிருந்து ஜூன் 30ம் தேதி வரை பின்பற்றுவார்கள். இந்த விதிமுறையினால், எந்த அச்சமும், தொந்தரவும் மக்களுக்கு இருக்காது. இது எந்த வகையிலும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.