நவம்பர் 1-க்குள் இதை செய்யாவிட்டால் உங்க கடைக்கு ஆபத்து - நீதிமன்றம் எச்சரிக்கை!

இனி தமிழில் பெயர் இல்லையென்றால் கடைக்கு ஆபத்து! உயர்நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு
தமிழ் பெயர்ப் பலகை
High Court
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வருகின்ற நவம்பர் 1-ம் தேதிக்குள் கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் என காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் உள்ள பல கடைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுத்து தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மும்பையைச் சேர்ந்த இந்திய சில்லறை வர்த்தக சங்கத்தினர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ் மொழிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி கே.சுரேந்தர்.

இதையும் படியுங்கள்:
கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!!
தமிழ் பெயர்ப் பலகை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேந்தர் வெளியிட்ட உத்தரவில், “தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும். கடைகளின் பெயர்ப் பலகையை தமிழில் மாற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என உத்தரவிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, தமிழில் பெயர் பலகைகளை மாற்ற தயார் எனவும், அதற்கு குறைந்தபட்சம் 3 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் இந்திய சில்லறை வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து கடைகளின் பெயர்ப் பலகைகளை தமிழில் மாற்ற, இன்றிலிருந்து வருகின்ற நவம்பர் 1-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார் நீதிபதி சுரேந்தர்.

கிட்டத்தட்ட 2 மாதம் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், கடை உரிமையாளர்கள் விரைந்து பெயர்ப் பலகைகளை மாற்றி விடுவது நல்லது.

கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் பெரியதாகவும், முதன்மையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட அளவுகளின் படி 5/8 அளவு தமிழ் எழுத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும் எனவும், 2/8 அளவு ஆங்கிலத்திற்கு இடம் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டால் 1/8 அளவு பிற மொழிகளைப் பயன்படுத்தலாம்.

இந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றமே காலக்கெடுவை நிர்ணயித்திருக்கும் நிலையில், இதனை மீறுவோர் மீது தொழிலாளர் நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஆய்வு நடத்தி, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

Chennai high court
Chennai high courtcredits : Wikipedia
இதையும் படியுங்கள்:
ஒரே கூட்டணியில் திமுக - அதிமுக.! மீண்டும் புயலை கிளப்பிய அமைச்சர்.!
தமிழ் பெயர்ப் பலகை

விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு முதலில் அரசு சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகு அபராதம் அல்லது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வணிகர் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, குறித்த காலக்கெடுவிற்குள் பலகைகளை மாற்ற அறிவுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் வணிகர்கள் சட்டப்படியான நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், வகுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழ் மொழியில் மாற்றுவதற்கான தெளிவான வழிகாட்டுதலை உடனடியாக பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com