

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரலாறு காணாத வாக்குசதவீதத்துடன் அசத்தும் நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் எக்ஸ் தளத்தில் “நல்லா இருப்போம், நல்லா இருப்போம், எல்லாரும் நல்லா இருப்போம்” என்று பதிவிட்டு தனது பேரானந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விஜய்க்கு சினிமா துறையை சேர்ந்த, ரஜினிகாந்த், அஜித், ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ், விக்ரம், குஷ்பு, நயன்தாரா, வெங்கட் பிரபு, நானி, ஜீவா உள்ளிட்ட பல பிரபலங்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நடிகரும் சத்யராஜின் மகனுமான சிபி சத்யராஜ் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றதோடு, தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை எழுதி வந்தார்.
அவரது குடும்பத்தில் சத்யராஜ் மற்றும் அவரது சகோதரி திவ்யா ஆகியோர் திமுகவுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், சிபி சத்யராஜ் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததோடு, தேர்தல் நாளுக்கு முன்பாக விஜய் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக “வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்” என்று கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 107 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதற்கு நடிகர் சிபி சத்யராஜ் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் விதம் வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-...
"பசை இல்லாவிட்டால் கூட்டம் ஒட்டாது" -அது மாறிவிட்டது!
"ஒட்டப்பட்ட சீட்டு இல்லாவிட்டால், மாற்றம் நிகழாது" -அது மாறிவிட்டது!
"ஒரு நடிகரால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது" -அவர் ஒரு தலைவராவார்
"அவர் மீண்டும் நடிப்புக்கே திரும்பிவிடுவார்" -அதற்கு வாய்ப்பே இல்லை, ராஜா
"அவருக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும்?" -நீங்கள் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்
"விஜய்யால் இதுவாக முடியாது... விஜய்யால் அதுவாக முடியாது..." -விஜய்யாக யாராலும் ஆக முடியாது!
அன்புள்ள விஜய் அண்ணா, அபாரமான திறமை, கடின உழைப்பு, பேரார்வம், ஒழுக்கம், தளராத கவனம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் உங்கள் சினிமாவில் உச்சத்தை அடைந்தீர்கள். ஆனாலும், உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றி அரசியலில் இறங்க முடிவு செய்தீர்கள். அதே குணங்களாலும், உங்கள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தூய நோக்கத்தாலும் இப்போது நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள்.
கூட்டணிகள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தீர்கள். பல ஆண்டுகளாக நீங்கள் சந்தித்த அனைத்து சிரமங்களையும் மீறி உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றீர்கள்.
அண்ணா, நீங்கள் திரையில் பலரைத் துவம்சம் செய்வதைப் பார்த்து நாங்கள் விசில் அடித்தோம், இப்போது அதை அரசியலிலும் மெய்ப்பித்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்களையும், ஆதரவாளர்களையும் பெருமைப்படுத்தி, உங்கள் தனித்துவமான பாணியில் அனைத்து எதிர்மறைப் பேச்சாளர்களின் வாயையும் அடைத்துவிட்டீர்கள்.
இறுதியாக, மக்கள் பணத்திற்காக அல்ல, உண்மைக்காகவே வாக்களிக்கிறார்கள் என்பதை நிரூபித்து தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நன்றி தலைவா. உங்கள் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாட்டின் மகன் உதயமாகிறார்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.