
இந்தியாவில் பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி மீது எப்போதும் ஒரு தனி மோகம் உண்டு. மேலும் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுவதால் பல ஆண்டுகளாக, மக்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகின்றனர். இந்தியாவில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதற்கான காரணம் இதுதான். இந்நிலையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் தற்போது தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1980-ம் ஆண்டு ஒரு கிலோ வெள்ளி 2715 ரூபாய்க்கும், 1990ல-ம் ஆண்டு 6463 ரூபாய்க்கும், 2000-ம் ஆண்டு 7900 ரூபாய்க்கும், 2020-ம் ஆண்டு 62572 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட வெள்ளி இந்தாண்டு ஒரு கிலோ வெள்ளி 107700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 45,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தங்கத்தை போல் வெள்ளியின் விலையை அதிரடியாக உயர்ந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாதவர்கள் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பொருளாதார வல்லூநர்களும் வரும் காலங்களில் தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் அதிகரிக்கும் என்று கூறி வருவதால் மக்கள் இப்போதே வெள்ளியில் முதலீடு செய்யத்தொடங்கி விட்டனர்.
அதுமட்டுமின்றி இந்தியப் பெண்களிடையே தங்க நகைகளை போலவே, வெள்ளியில் செய்யப்பட்ட கொலுசுகள், மோதிரங்கள், மெட்டி, காதணிகள் மற்றும் வளையல்களுக்கு அதிக தேவை உள்ளது.
மக்களின் வெள்ளி வாங்கும் ஆர்வத்தை பார்த்த மத்திய அரசும் தங்கத்திற்கு ஹால்மார்க் அறிமுகப்படுத்தியதை போன்று வெள்ளியிலும் ஹால்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் தூய தங்கத்தை வாங்குவதை போல், வெள்ளிப்பொருட்களிலும் தூய்மையை உறுதி செய்வதற்காக, தங்கத்திற்குப் பிறகு வெள்ளியின் மீது ஹால்மார்க் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை செப்டம்பர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களுக்கு மீது அமலுக்கு வரும் இந்த புதிய விதி, இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வெள்ளி நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறை தற்போது கட்டாயமாக்கப்படவில்லை. விருப்பத்தின் பேரில், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட அல்லது முத்திரையிடப்படாத வெள்ளி நகைகளை நகைக்கடைகளில் விற்பனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளியில் 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் பொருந்தும். அதனால் இனி போலி தங்கம் போல, போலி வெள்ளிகளையும் மக்களால் ஈசியாக அடையாளம் காண முடியும். ஹால்மார்க்கில், வெள்ளி நகைகளில் ஒரு சிறப்பு குறி இருக்கும். அதில் ஒரு தனித்துவமான 6 இலக்க குறியீடு ( HUID) எழுதப்பட்டிருக்கும். இந்த குறியீடு ஒவ்வொரு நகைக்கும் வித்தியாசமாக இருக்கும்.
இந்த குறியீடு நகைகள் BIS தரநிலைகளின்படி சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதைக் கூறும். வெள்ளியைப் பொறுத்தவரை, 800, 835, 900, 925,970 மற்றும் 990 போன்ற 6 தரங்கள் இருக்கும். இவை வெள்ளி நகைகளின் தூய்மையின் அளவைக் காட்டுவதாகும். ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள் சர்வதேச தரத்தில் உள்ளன.
கட்டாய வெள்ளி ஹால்மார்க் முத்திரை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தூய்மை தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதன் மூலம், உலக சந்தைகளில் இந்திய வெள்ளி நகைகளின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது.
ஹால்மார்க் என்பது உலோகத்தின் தூய்மைக்கு சான்றளிப்பதாகும். வைரம், பிளாட்டினம் மற்றும் தங்கத்திற்குப் பிறகு, இப்போது வெள்ளியின் மீது ஹால்மார்க்கிங் முறையைத் தொடங்கியுள்ளது. இது சுத்தமான கலப்படம் இல்லாத நகைகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. ஹால்மார்க் இல்லாத நகைகளில் கலப்படம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் 2000-ம் ஆண்டில் இருந்து தங்க நகைகளின் மீது ஹால்மார்க் நடைமுறைக்கு வந்தது.
வெள்ளியில் ஹால்மார்க் செயல்படுத்தப்படுவதால், அதை வாங்கும் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகின்றனர் நகைக்கடை விற்பனையாளர்கள். தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை வந்த பிறகு தங்கத்தின் தூய்மையில் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதால், அதேபோல், வெள்ளியின் மீதும் ஹால்மார்க் முத்திரை நடைமுறைக்கு வந்துள்ளது மக்களுக்கு வெள்ளியின் தூய்மையின் மீதும் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளியில் 92.5% தூய வெள்ளி மற்றும் 7.5% தாமிரம் போன்ற பிற உலோகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
நீங்கள் வாங்கும் வெள்ளி கொலுசு அல்லது வெள்ளிப்பொருட்கள் எவ்வளவு தூய்மையானது என்பதை ஹால்மார்க் முத்திரை உங்களுக்குத் தெரிவிக்கும். இதன் மூலம் அதில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
ஹால்மார்க் முத்திரை வெள்ளி முற்றிலும் தூய்மையானது என்பதை உறுதி செய்வதுடன் ஹால்மார்க் செய்த பிறகு, கடைக்காரர்கள் கலப்பட வெள்ளி நகைகளை விற்க முடியாது என்ற சூழலும் உருவாகும்.
ஹால்மார்க் செய்த பழைய வெள்ளி நகைகளை நீங்கள் விற்பனை செய்யும் போது, கடைக்காரர்கள் அது கலப்பட வெள்ளி என்று கூற முடியாது. அதேபோல் எந்தவொரு பழைய வெள்ளி நகையையும் விற்கும்போது நியாயமான விலையைப் பெற இந்த ஹால்மார்க் முத்திரை உங்களுக்கு உதவும்.
வெள்ளியில் செய்யப்படும் எந்த நகையும் 100% தூய வெள்ளியால் செய்யப்படுவதில்லை. அப்படி செய்யவும் முடியாது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் மிகவும் மென்மையான உலோகம் என்பதால், நகைகளைச் செய்ய தூய வெள்ளியைப் பயன்படுத்துவது கடினம். அதனால் வெள்ளி நகைகளை செய்யும் போது அதனுடன் தாமிரம், துத்தநாகம் மற்றும் ஸ்டெர்லிங் ஆகியவை பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன. வெள்ளியில் ஹால்மார்க் செய்யும் போது மற்ற உலோகங்களை விட வெள்ளியின் தரமும், அளவும் அதிகமாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு தூய வெள்ளி நகையை வாங்கினோம் என்ற திருப்தியான மனநிலை ஏற்படும்.
இனிமேல் வெள்ளி நகைகளை வாங்கும் போது, ஹால்மார்க் முத்திரை உள்ளதாக என்பதை பார்த்து வாங்குங்கள். அதேபோல் ஹால்மார்க்கில் எந்த கீறல்களோ அல்லது கறைகளோ இருக்கக்கூடாது.
வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, வெள்ளியில் முதலீடு செய்வதற்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம்.
எனவே வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை விதிமுறை வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.