
ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி வந்தாலே அரசு ஏதாவது மாற்றத்தை கொண்டு வருமோ அதனால் நமக்கும் ஏதாவது பிரச்சனைகள் வருமோ என்ற அச்சம் சமீப காலமாகவே மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 1-ம்தேதியில் இருந்து எல்பிஜி சிலிண்டர் முதல் வங்கி கார்டுகளை பயன்படுத்துவது வரை என பல அதிரடி மாற்றங்கள் நடைமுறைக்கு வரஉள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
எல்பிஜி சிலிண்டர்
சாமானிய மக்களின் அத்தியாவசிய பொருட்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சமையல் எரிவாயு சிலிண்டர். சிலிண்டரின் விலை ஏறும்போது அது சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் எல்பிஜி சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றன. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குகள் மற்றும் நிறுவன கணக்கீடுகளுக்கு ஏற்ப சிலிண்டர் விலைகள் ஏற்ற இறக்கமாக மாறுபடும்.
அதன் அடிப்படையில் மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். கடந்த நான்கு மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் கமர்சியல் சிலிண்டர் விலை(வணிக பயன்பாட்டு சிலிண்டர்) ரூ.1,823.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில், இந்திய நிறுவனங்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்திய நிறுவனங்களுக்கு கணிசமான சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ம்தேதி எல்பிஜி சிலிண்டர் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா அல்லது விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெயை சேகரிப்பதில் இந்தியா முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், டிரம்பின் 50 சதவீத வரிவிதிப்பு, சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் போன்ற காரணங்களால் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்றே கூறப்படும் நிலையில் அதுவரும் செப்டம்பர் 1-ம்தேதி பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது.
வெள்ளி
இந்தியாவில் இப்பொழுது மக்களின் பாதுகாப்பான முதலீடு என்றால் அது தங்கம் மற்றும் வெள்ளி என்றே சொல்லாம். உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் அதிக தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கி அணிகிறார்கள். தங்க நகைகளை வாங்கும்போது, நீங்கள் நிச்சயமாக ஹால்மார்க்கிங் சரிபார்க்க வேண்டும். இது தங்கத்தின் தூய்மையைப் பற்றி நமக்குச் சொல்லும்.
இப்போது, தங்கத்தைப் போலவே, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 1-ம்தேதி முதல் தொடங்க உள்ளது. வெள்ளியில் 6 இலக்க HUID ஹால்மார்க்கிங் பொருந்தும். இந்த ஹால்மார்க் முத்திரை நீங்கள் வாங்கும் வெள்ளி பொருட்கள் எவ்வளவு தூய்மையானது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
இதன் மூலம் தங்கத்தை போல் வெள்ளிப்பொருட்களையும் மக்கள் மேலும் நம்பகத்தன்மையோடு வாங்க முடியும். இந்த ஹால்மார்க்கின் முறை வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் வெள்ளி வாங்க அல்லது முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் செப்டம்பர் 1-ம்தேதி பிறகு வாங்குவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI)
இந்தியாவில் முன்னணி அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 1-ம்தேதி முதல் திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையின்படி ஆட்டோ-டெபிட் தோல்வியுற்றால் இனிமேல் 2% அபராதம் விதிக்கப்படும் என்றும் அதே நேரத்தில் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேபோல் எஸ்பிஐ கார்டை பயன்படுத்தி எரிபொருள் வாங்குவது மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதே நேரத்தில், வெகுமதி புள்ளிகளின் மதிப்பு குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. எனவே அபராதங்களைத் தவிர்க்க எஸ்பிஐ கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் செலவினங்களை கவனமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ATM-ல் பணம் எடுப்பதில் புதிய விதிமுறை
இந்தியாவில் உள்ள சில வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டில், வரும் செப்டம்பர் 1-ம்தேதி முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளன. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர வரம்பைத் தாண்டி (3 முறைக்கு மேல்) பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகளவு கட்டணத்தை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பின்பற்றுவதற்கு அழுத்தம் கொடுத்து வருவதால், கூடுதல் செலவுகளைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் அதிகமுறை கார்ட்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுப்பதைக் குறைத்து கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பதிவு தபால் விரைவு தபால் உடன் இணைப்பு
100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தபால் துறை வழங்கி வந்த பதிவு தபால் சேவையை விரைவு தபால் சேவையுடன் இணைத்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வசதியை அதிகரித்து சேவையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் மூலம், பதிவு தபாலில் இருந்த அஞ்சல் சென்றடைந்ததற்கான சான்று (acknowledgement receipt) மற்றும் நபரிடம் சேர்ப்பிக்கப்படும் அம்சங்கள் அனைத்தும் விரைவு தபாலில் சேர்க்கப்படும்.
வைப்பு விகிதங்கள் மறுபரிசீலனை
நாட்டில் உள்ள பல வங்கிகளும் செப்டம்பர் மாதத்தில் தங்கள் வைப்பு விகிதங்களை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, பெரும்பாலான கடன் வழங்குநர்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.5 முதல் 7.5 சதவீதம் வரை வழங்கப்பட்டு வரும் நிலையில், வட்டி விகிதங்கள் கீழ்நோக்கி திருத்தப்படலாம் என்று சந்தை ஊகங்கள் தெரிவிக்கின்றன.