

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ப்ரீத்தி உன்ஹேல். 51 வயதான இவர் தானம் பெறப்பட்ட மாற்று இதயத்துடன் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து மிக நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை அரிதானது, 25 ஆண்டுகளுக்கு முன்பு தானம் செய்பவர் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது மற்றும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது நீண்டகால உயிர்வாழ்வு நிச்சயமற்றதாகவே இருந்த நிலையில் 25 ஆண்டு உயிர் வாழ்ந்தவர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டில் பிரீத்தி உன்னேலுக்கு ‘டைலேட்டட் கார்டியோமயோபதி’ என்ற நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது - இதனால் அவரது இதய தசை பலவீனமடைந்து பெரிதாகி, இரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் திறனைக் குறைத்து இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
மும்பை உட்பட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லாத நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே உயிர் வாழ ஒரே வாய்ப்பு என்று அவருக்குச் சொல்லப்பட்டது.
அங்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் வேணுகோபால் மற்றும் கே.கே.தல்வார் ஆகியோரிடம் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதல் குறைவாக இருந்ததால், தானம் செய்யப்பட்ட இதயம் கிடைப்பதற்கு முன்பு மருத்துவர்கள் அவளை விரிவாக மதிப்பீடு செய்தனர்.
அப்போது இதய மாற்று சிகிச்சையே ஒரே வழி என்று தீர்மானிக்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம், மூளைச்சாவு அடைந்த ஒரு சிறுவனின் இதயம் அவருக்கு வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் உயிர்வாழ சுமார் 85% வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் 25 ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். அந்தக்காலத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் சவாலானதாகவும், அதன் வெற்றி குறித்த விழிப்புணர்வு இல்லாதநிலை இருந்தது. மேலும் பேசுவதற்கு உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை. இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் நீண்ட காலம் நீடிக்காது எனவும் பலர் தெரிவித்தனர். ஆனால் வேறு வழியில்லை, வாழ்ந்தாக வேண்டும் என ஆபத்தை எதிர்கொள்ள பிரீத்தி அன்ஹேல் எண்ணினார்.
‘இந்த உயிர்வாழ்வு என்னுடையது மட்டுமல்ல,’ என்று கூறும் அவர், ‘இது மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சொந்தமானது. ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு அமைப்பு தேவை,’ என்றும் அவர் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளில் அவர் பல உடல்நல சவால்களை எதிர்கொண்டார். அன்ஹேல் தினசரி நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். 2006-07 காலக்கட்டத்தில் இதயம் நிராகரிக்கப்படும் ஆபத்தான நிலைக்கு சென்று தப்பினார். அப்போது சிறுநீரகப் பாதிப்பு, எலும்புச் சிதைவு, முக முடக்கம் என பல்வேறு பாதிப்புகளால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் முறையான மருத்துவ சிகிச்சையால் குணம் அடைந்தார்.
உறுப்புமாற்று பெற்றோருக்கான விளையாட்டு போட்டியில் பிரீத்தி இறகுப்பந்து பிரிவில் தங்கம் பெற்று சாதித்தார். மேலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை குறித்த விழிப்புணர்வு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து அவர், “வனத்துறை அதிகாரியான கணவரின் ஆதரவும், எய்ம்ஸ் டாக்டர்களின் அர்ப்பணிப்பும்தான் இந்த சாதனைக்கு காரணம்.
மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சையை அறிவுறுத்தினால், வேறு வழியில்லை, உடனடியாக டாக்டர்கள் பரிந்துரையை தயங்காமல் ஏற்க வேண்டும். நன்கொடையாளர்கள் அரிதானவர்கள். முழுமையாக வாழுங்கள், ஒழுக்கமான வாழ்வியலை கடைப்பிடித்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம். ஏனெனில் எங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.