சீனாவில் சமீபத்தில் நடந்த இராணுவ அணிவகுப்பின் போது ரஷ்ய அதிபர் புதின், “உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்று அறுவைச் சிகிச்சை (Organ transplant) செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ விரும்புகிருகிறீர்களோ, அவ்வளவு காலம் வாழ முடியும்” என்றார். அதற்கு பதிலளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங், “இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை கூட வாழலாம் என்று சிலர் கணிக்கின்றனர்.” என்று கூறினார். இவர்களின் இவ்வுரையாடல் சமூக ஊடகங்களில் இப்போது வைராலாகி வருகிறது. உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை பற்றிய அடிப்படை உண்மைகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் (Organ transplant) அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஏழைகளுக்கு சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கான செலவுகள் ஆயுஷ்மான் திட்டத்தின்மூலம் ஈடு செய்யப்படுகின்றன. விபத்துகளால் ஏற்படும் மூளைச்சாவுகள் உறுப்புத் தானத்தை பெருமளவு சாத்தியப்படுத்தியுள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Organ transplant) என்பது நோயுற்ற அல்லது செயலிழந்த ஓர் உறுப்பை ஓர் உறுப்பு தேவைப்படும் நோயாளியின் உடலுக்கு மாற்றுவதை குறிக்கிறது. பொதுவாக இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம் ஆகியவை மாற்று உறுப்புச் சிகிச்சையின் மூலம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் தானமாகப் பெறும் உறுப்பின் ஆயுட்காலத்தையும், தரத்தையும் பொறுத்தது. பலர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்பு நீண்டகால நல்வாழ்வை அனுபவிக்கின்றனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொற்று, இரத்தப்போக்கு மற்றும் மயக்க மருந்துக்கான எதிர்வினைகள் போன்ற சிக்கல்களின் அபாயத்தைக் கொண்டுள்ளது.
உறுப்பு நிராகரிப்பைத் தடுக்க, நோயாளிகள் எடுத்தும் கொள்ளும் மருந்துகள் தொற்றுகளுக்கு ஆளாவது, எடை அதிகரிப்பு, சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுவதைத் தடுக்கிறது. சில மாற்று அறுவை சிகிச்சைகள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
உறுப்பு நிராகரிப்பு, மாற்று அறுவை சிகிச்சை முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுக் கூட சிக்கல்கள் ஏற்படலாம். தொடர் மருத்துவக் கண்காணிப்புத் தேவை. உறுப்பு நிராகரிப்பின் அறிகுறிகளைப் பற்றி மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். இது தானம் பெறும் உறுப்பைப் பொறுத்தது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுநீர் வெளியேற்றம் குறைதல், வீக்கம், எடை அதிகரிப்பு, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம் ஆகிய பக்க விளைவுகளும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மஞ்சள் காமாலை, அடர் நிற சிறுநீர், சோர்வு, குமட்டல், வயிற்று வலி ஆகிய பக்கவிளைவுகளும், இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூச்சுத் திணறல், சோர்வு, எடை அதிகரிப்பு, கால்களில், வயிற்றில் வீக்கம் ஆகியவையும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சல், சோர்வு ஆகியவையும் ஏற்படலாம்.
உறுப்பு நிராகரிப்பு இருப்பதை உறுப்பு தானம் பெற்றவர் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது. சிகிச்சையில் பொதுவாக நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட புதிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
சில நேரங்களில் சிகிச்சையை மேம்படுத்த இடமாற்றம் செய்யப்பட்ட உறுப்பின் பயாப்ஸியும் தேவைப்படலாம்.
இறுதிக் கட்ட உறுப்பு செயலிழந்த நோயாளிகள், மாற்று அறுவை சிகிச்சைக்கான தகுதியை தீர்மானிக்க ஒரு மருத்துவக் குழுவால் மதிப்பீடு செய்யப்படுவார்கள். தகுதி பெற்றிருந்தால், அவர்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். பொருத்தமான கொடையாளரின் உறுப்பு கிடைக்கும்போது, இரத்த வகை, திசு வகை, உறுப்பு அளவு போன்ற காரணிகளின் அடிப்படையில் அது பெறுநருடன் பொருத்தப்படுகிறது. பொருத்தமான உறுப்பினைத் தரத் தயாராகும் நன்கொடையாளர் கண்டறியப்பட்டவுடன், பெறுநர் தானம் செய்யப்பட்ட உறுப்பைப் பெற அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உடல் உறுப்பு தானம் பெற்றவர்களை மருத்துவ நிபுணர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.
கடுமையான உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒரு உயிர்காக்கும் விருப்பமாகும். இந்த செயல்முறையை கருத்தில் கொண்ட எவரும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் அபாயங்கள், நன்மைகள் மற்றும் செயல்முறையைப் புரிந்துகொள்வது அவசியம். ஒருவரின் இறப்புக்குப் பின் செய்யப்படும் கண் தானம் இருவருக்கு பார்வையைக் கொண்டுவரும். அதே போன்றே தற்போது பரவாலாகக் காணப்படும் இரத்ததானமும் பல உயிரிழப்புகளை தவிர்க்க உதவுகின்றன.
2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிக அளவில் உறுப்புகள் தானம் செய்த மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் உறுப்புகள் கிடைக்காமல் ஒருவர் கூட மரணித்து விடக்கூடாது என்ற இலட்சியத்துடன் நாம் பயணிக்க வேண்டும்.