
கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு படு லாபம் கிடைத்திருக்கும். தற்போது வெள்ளியில் முதலீடு செய்தாலும் வரும் காலங்களில் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. கடந்த சில வாரங்களில் முதல்முறையாக ஒரு பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டியது. நிபுணர்களைப் பொறுத்தவரை, வெள்ளி புலிப்பாய்ச்சலுக்கு காத்திருப்பதாக கூறுகிறார்கள். வெள்ளி கையிருப்பு 2024-க்கு பிறகு எப்போதையும் விட 50 சதவீதம் ஆக குறைந்துள்ளது. தற்போது 330 லட்சம் அவுன்ஸ் வெள்ளியே கஜானாவில் உள்ளது. இது தற்காலிகமான குறைபாடல்ல, உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் வெள்ளியின் தேவையின் பிரதிபலிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
சில்வர் இ.டி.எப்.களின் உலகளாவிய முதலீடு 450 மில்லியன் டாலர் வரை கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளி அகழ்ந்தெடுக்கும் நிறுவனங்களின் பங்குகளும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது வெள்ளி மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பைக் காட்டுகிறது. 2000-ம் ஆண்டில் இந்தியாவில் 1 கிராம் வெள்ளி விலை ரூ.10 ஆகும்.
இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.104க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.162-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,62,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 1100 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தோராயமாக, ஆண்டுதோறும் 15 சதவீதமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே வெள்ளிதான் அடுத்த தங்கமாகும் வாய்ப்புள்ளது.
அதேபோல் இந்தாண்டில் தங்கம், பங்குச் சந்தையைவிட ஒன்று அதிக லாபம் கொடுத்துள்ளது என்றால், அது வெள்ளி என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெள்ளி விலை இந்தாண்டில் இதுவரை சுமார் 60% வரை லாபம் கொடுத்துள்ளது. தொழில்துறை தேவை, பாதுகாப்பான முதலீடு இந்த இரு வலுவான தேவைகள் காரணமாக வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் எட்டியுள்ளது. தங்கத்தின் விலை இந்தாண்டு 47% உயர்ந்திருந்தாலும், தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி இன்னும் சிறப்பான வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.
வெள்ளியின் அதிகரித்துவரும் தொழில் துறை பயன்பாடு மற்றும் முதலீட்டுத் தேவை காரணமாக, அது ‘அடுத்த தங்கம்’ என்ற நிலையை எட்டக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பல வல்லுநர்கள் நம்புகின்றனர்.
உலகளவில் நிச்சயமற்ற தன்மை காரணமாக வெள்ளி முதலீடுகள் வலுவான இடத்தை பிடித்துள்ளன. அதனால் நாளுக்குநாள் சில்வர் இடிஎஃப் முதலீடுகளும் உயர்ந்து வருவதால், வெள்ளி விலை புது உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால், அதற்கு மாற்றான வெள்ளி பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மேலும், இது தங்கத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு நல்ல முதலீடாகப் பலரால் பார்க்கப்படுகிறது.
தங்கத்தை தாண்டி வெள்ளி விலை உயர்வதால், அடுத்த ஆறு மாதங்களில் வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1,70,000 முதல் ரூ.1,75,000 வரை எட்டும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளார். இதற்கு மேலும் அதிகரிக்கலாம் ஆனால் குறையாது என்பதே அவர்களின் கணிப்பாகும். தற்போதைய சந்தை சூழலில், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மேலும் இது எதிர்காலத்தில் தங்கத்தை விட அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள சூழலில், வெள்ளி ‘ஏழைகளுக்கான தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ள வெள்ளி உலகளவில் மாபெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. 2025-ல் முதலீடு செய்யாமல் போனால் மிகச்சிறந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடும் என்பதை மறக்க வேண்டாம்.