

சரக்கு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற முடிவை வாபஸ் பெறாவிட்டால் ஆகஸ்டு 1-ம்தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று தென்இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்கம் (SIMTA), ஜிபிஎஸ் கருவி அதாவது 'வெஹிக்கிள் லொகேஷன் டிராக்கிங் டிவைஸ்' (VLTD) கட்டாயமாக்கப்படுதல் மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றை எதிர்த்து ஆகஸ்டு 1-ம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
வேலைநிறுத்தத்திற்கான முக்கிய காரணங்கள்:
* VLTD கட்டாயம்: சரக்கு வாகனங்களுக்கு 'வெஹிக்கிள் லொகேஷன் டிராக்கிங் டிவைஸ்' (VLTD) பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* VLTD கருவி பொருத்தவில்லை என்பதற்காக வாகன தகுதிச் சான்றிதழ் மற்றும் தேசிய அனுமதி (National Permit) புதுப்பித்தல் போன்ற சேவைகள் தடைபட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* பெங்களூரு-மைசூரு உள்கட்டமைப்பு காரிடார் போன்ற சில சாலைகளில் திடீரென உயர்த்தப்பட்ட 10 முதல் 15 சதவீதம் வரையிலான சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இந்த உயர்வு போக்குவரத்து நிறுவனங்களின் நிதிச் சுமையை அதிகரித்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.
* ஒரு விதிமீறலுக்கு மீண்டும் மீண்டும் அபராதம் விதிக்கப்படுவது, முறையான குறைதீர்ப்பு மையம் இல்லாதது மற்றும் இ-சலானில் (E-challans) உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும்.
மேலும் VLTD கருவி பொருத்தவில்லை என்பதற்காக வாகன தகுதிச் சான்றிதழ் மற்றும் தேசிய அனுமதி (National Permit) புதுப்பித்தல் போன்ற சேவைகள் தடைபட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்இந்தியா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் மத்திய அரசு அனைத்து வணிக வாகனங்களிலும் இருப்பிடத்தை கண்டறியும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும், எச்சரிக்கை பொத்தான் அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை அமல்படுத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
சரக்கு லாரிகளில் VLTD பொருத்துவதை கட்டாயமாக்குவதற்கும், அதனை 'வாகன்' (VAHAN) போர்ட்டலுடன் இணைப்பதற்கும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஃபாஸ்டேக் (FASTag) மற்றும் ஜி.பி.எஸ் (GPS) போன்ற வசதிகள் இருக்கும் போது இது தேவையில்லாத கூடுதல் சுமை என லாரி உரிமையாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு மாநிலத்தில் இந்த கருவிகளை பொருத்த ரூ.3000ம், மற்றொரு மாநிலத்தில் இந்த கருவிகளை பொருத்த ரூ.15 ஆயிரமும் என கட்டணம் வசூலிக்கிறார்கள். சரக்கு வாகனங்களுக்கு இந்த கருவிகள் தேவை இல்லை.
பயணிகள் வாகனங்களில் இந்த கருவிகள் பொருத்தினாலும் இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. எக்காரணம் கொண்டும் சரக்கு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி அமைக்க வேண்டிய தேவை இல்லை.
மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தெலுங்கானா, ஆந்திராவில் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டுவிட்டன.
ஆனால் கர்நாடகா, தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் இந்த சோதனை சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த மாநிலங்கள் உடனே எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும். நாட்டில் மொத்தம் 24 லட்சம் லாரிகள் ஓடுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திலும், தேசிய விநியோகச் சங்கிலியிலும் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும்.
மேலும் வருகிற ஜூலை 30-ம் தேதிக்குள் எங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்காவிட்டால் ஆகஸ்டு 1-ம்தேதி முதல் தென்இந்தியாவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 தென் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 24 லட்சம் லாரிகள் இதில் பங்கேற்கின்றன.
இந்த வேலை நிறுத்த போராட்டம் ஏற்பட்டால் தென்னிந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர சரக்குகள் கொண்டு செல்வதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.