சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து குலுங்கியதால், ஒருவர் அப்போதே உயிரிழந்தார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொதுவாக விமானம், ஹெலிகாப்டர் போன்றவை விபத்துக்குள்ளானால், பெரிய அளவு இழப்புகளை சந்திக்க நேரிடும். ஆகையால், மற்றப் போக்குவரத்துகளை விட அதிகமான பாதுகாப்புகள் கொண்டவை விமானப் போக்குவரத்து. இருப்பினும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறதான் செய்கின்றன. இரண்டு நாட்கள் முன்னர்தான் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதற்கு காரணம், ஹெலிகாப்டரின் தொழில்நுட்ப கோளாறா? அல்லது திட்டமிடப்பட்ட செயலா? என்பது தெரியவில்லை.
அந்தவகையில் தற்போது, லண்டனில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடுவானில் திடீரென்று தாறுமாறாக குலுங்க ஆரம்பித்தது. இதற்கு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மோசமான காற்றினால் மட்டுமே இதுபோன்ற சம்பவம் நிகழும். ரேடாரில் டர்புலன்ஸ் குறித்த எச்சரிக்கை முன்கூட்டியே வராததால், விமானியாலும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பயணிகள் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
இதில் பயணித்த பலருக்கும் மோசமாக அடிப்பட்ட நிலையில், எமர்ஜென்ஸி முறையில் விமானம் பாங்காக்கில் தரையிறக்கப்பட்டது. ஆனாலும் கூட ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் ஆகியோர் பயணித்தனர். இது குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கள் விமானத்தில் இந்தச் சம்பவத்தில் ஒரு பயணி உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். நிலைமையைச் சமாளிக்க மேலும் ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்பி உள்ளோம்." என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் டெல்லி-சிட்னி ஏர் இந்தியா விமானத்தில் இதேபோன்ற டர்புலன்ஸ் காரணமாகப் பல பயணிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.