‘சிந்தைக்கு இதமான சிங்கப்பூர்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

‘சிந்தைக்கு இதமான சிங்கப்பூர்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
Published on

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுப் பயணமாகச் சென்றிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு சிங்கப்பூர்வாழ் தமிழ் அமைப்புகள் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தன. இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கடல் கடந்து சிங்கப்பூர் வந்துள்ளதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருப்பதுபோல்தான் நினைத்துள்ளேன். அந்தளவுக்கு சிங்கப்பூர் எனது சிந்தைக்கு இதமான ஊராக உள்ளது.

சிங்கப்பூரில்தான் தமிழ் செய்தித்தாள்கள் தோன்றின. சிங்கப்பூரின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்துள்ளார். சிங்கப்பூரை முன்னேற்றியவர் இந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ. உலக நாடுகளில் பரந்து விரிந்து வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம்தான். பெரியார் இரண்டு முறை சிங்கப்பூர் வந்து தன்னுடைய சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பினார். இவ்வாறு திராவிட இயக்கத்தால் வளர்ந்த விழுதுகளான உங்களை காணத்தான் நானும் வந்துள்ளேன்” என்று பேசினார். அதைத் தொடர்ந்து, ‘சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் சிலை வைக்கப்படும்’ என்றும் முதல்வர் கூறி உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் தொழிலதிபர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து இருக்கிறார்.

அப்போது சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினார். மேலும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு மு.க.ஸ்டாலின், ‘இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.

அதன் பின்னர் சிங்கப்பூர் வாழ் தமிழறிஞர் திண்ணப்பனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தனது வாழ்க்கை வரலாற்று நூலான, ‘உங்களில் ஒருவன்’ முதல் பாக நூலினை வழங்கினார். அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் நாட்டுக்குச் செல்வதற்காக சிங்கப்பூர் விமான நிலையம் செல்லும் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ள உணவகத்துக்குச் சென்று தேநீர் அருந்தினார். அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்தும் கலந்துரையாடினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com