

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், அதன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) மதியம் 2 மணியளவில் வெளியாகிறது. கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற்ற இந்தப் பணியின் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்தப் பணிகளில் அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியாகும் வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், நாளை (டிச. 20) முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 'படிவம் 6'-ஐப் பயன்படுத்தி தங்களது பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்தத் திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை ஆய்வு செய்த பிறகு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
SIR பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்வது எப்படி?
தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் அல்லது தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் (EPIC Number) பயன்படுத்திச் சரிபார்க்கலாம். ஒருவேளை உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாகவோ அல்லது அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு அலுவலரிடமும் தலா 50 விண்ணப்பப் படிவங்கள் கையிருப்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் உரிய அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், முகவரி மாற்றம் அல்லது தொகுதி மாற்றம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும்.