

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் (SIR) கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி தொடங்கியதில் இருந்தே பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் SIR பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் இவர்களுடன் திமுக கட்சியை சேர்ந்த பல பிரமுகர்களும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வரும் 11-ம்தேதியுடன் (நாளை)SIR பணிகள் முடிவடைய உள்ளது. அதற்குள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட மாட்டாது.
எனவே மக்கள் சிரமம் பார்க்காமல் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறா என்பதை பார்த்து உடனே உங்களது ஆதாரங்களை காட்டி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது நல்லது.அதனை தொடர்ந்து வரும் 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதில் கையொப்பமிட்ட கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் இடம் பெறும். அதன்பின் உங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்படும். கடைசியாக பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தான் 2026-ம்ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்.
எனினும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பலமுறை நேரில் சென்று முயற்சித்த போதும் வாக்காளர்கள் இருப்பிடத்தில் வசிக்காதது, இடமாற்றம், இறப்பு, இரட்டைப்பதிவு போன்ற பல காரணங்களால் சில வாக்காளர்களிடம் இருந்து கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தகுதியான எந்த வாக்காளரும் வரைவு பட்டியலில் இருந்து தவற விடப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்திஉள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் 99.91 சதவீத பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், 99.27 சதவீத படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 6 கோடியே, 36 லட்சத்து 44 ஆயிரத்து 38 பேரின் பெயர் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.