பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள், தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டன. போலியான வாக்காளர்களை நீக்குவதே இந்த சிறப்பு திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
பீகாரில் வெற்றிகரமாக சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு தற்போது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத் சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 99.81% வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய திருத்தப் பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஒரு வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு கடைசி தேதியை டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்.
தற்போது வரை தமிழ்நாட்டில் 99.81% வாக்காளர் படிவங்கள், அதாவது 6 கோடியே 39 லட்சம் படிவங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் 98.23%, அதாவது 6 கோடியே 29 லட்சம் வாக்காளர் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் முடிவடைய இன்னும் 6 நாட்களே மீதம் உள்ள நிலையில், விநியோகிக்கப்பட்ட படிவங்களைத் திரும்பப் பெறுவதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 50 கோடியே 92 லட்சம் வாக்காளர் படிவங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 49 கோடியே 18 லட்சம் வாக்காளர் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளில் சுமார் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நிவவரப்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்காளர் படிவங்களும் அச்சடிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாட்டில் 99.81% வாக்காளர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
வாக்காளர் படிவங்களை நிரப்புவதில் பொதுமக்களுக்கு சில குழப்பங்களும், சிரமங்களும் இருந்தன. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் 962 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்கள் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 99.50% வாக்காளர் படிவங்கள் புதுச்சேரியில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 94.12% வாக்காளர் படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.