காமராஜரையே நீங்கள் தோற்கடித்தீர்கள்: விஜய் பற்றிய கேள்விக்கு சிவக்குமார் பதில்..!!

Sivakumar and Sathyaraj
Sivakumar pressmeetAI
Updated on

இன்று கோவையில் செய்தியாளர்களை நடிகர் சிவகுமார், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் சத்யராஜ், சிவக்குமாருடன் இருந்தார். அப்போது நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சிவக்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சிவக்குமார் "விஜய் ஆட்சிக்கு வந்ததில் சந்தோஷம்தான் , மாற்றம் என்பது உலகில் எப்போதும் தவிர்க்க முடியாது. 1954 ஆம் ஆண்டில் இருந்து 9 வருடங்கள் காமராஜர் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார். 9 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். காமராஜர் இறக்கும் போது அவரது தலையணையின் கீழ் 140 ரூபாய் பணம் , நாலு வேட்டி சட்டை , இரண்டு ஜோடி செருப்பு ஆகியவை மட்டுமே அவரிடம் இருந்தது.

காமராஜர் தனக்கென்று எந்த ஒரு சொத்தும் சேர்க்காமல் மறைந்த தலைவர். அவரைப் போன்ற ஒரு தலைவரை எப்பொழுதும் பார்க்க முடியாது. அந்த காமராஜரையே நீங்கள் தோற்கடித்தீர்கள் அல்லவா? அப்போது மக்கள் மாற்றம் வேண்டும் என்று திமுகவை வெற்றி பெற வைத்தனர். அப்போது பக்தவச்சலம் தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது என்று திமுக வெற்றி பெற்றதை குறிப்பிட்டார்.

திமுகவை விஷக்கிருமி என்று எவ்வாறு குறிப்பிட முடியும்? திமுகவும் அதிமுகவும் தானே நாட்டை 60 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்து உள்ளனர். இன்று இவர்களை எல்லாம் தாண்டி நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். மக்கள் மாற்றத்தை விரும்பி தான் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். யார் வேண்டுமென்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தான் நீதிபதிகள், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை உள்ள முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் காசு எதுவும் வாங்காமலேயே விஜய்க்கு வாக்களித்துள்ளனர். பெண்கள் நிறைய பேர் விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள் எல்லாம் யார்? என் பையன் ஓட்டு போட்டு இருக்கிறான், என் பேரன் அவருக்கு ஓட்டு போட்டு இருக்கிறான். அவர்கள்தான் நாளை வாழ போகிறவர்கள் , நான் இன்னும் நான்கு ஐந்து வருடங்களில் சாகப் போகிறவன்.

அந்த தலைமுறை தங்களுக்கு என்று ஒரு சரியான தலைவனை தேர்ந்தெடுக்கும் பொழுது அதை தவறு என்று சொல்ல நீங்கள் யார்? அவர்(விஜய்) நல்லது செய்வார் என்று நம்புவோம் என்றார்.

தமிழ்நாட்டில் மட்டுமே 60 ஆண்டுகாலமாக சினிமா துறையினர் ஆட்சியில் இருந்து வருகின்றனர்? அது பற்றிய கருத்தினை ஊடகவியலாளர் கேட்டார். காந்தி காலத்தில் இருந்து , அதற்கு முந்தைய காலத்தில் கூட அரசியல்வாதிகளின் தாக்கம் அதிகம் இருந்தது ,அவர்கள் விடுதலைக்கு போராடியவர்கள். விடுதலை கிடைத்த பின்னர் எம்ஜிஆர் , என்டிஆர் , சிவாஜி, ஜெயலலிதா போன்றோர் தான் ஐடோலாக மாறி இருந்தனர். அவர்களின் முகத்தை தான் எப்போதும் குளோசப்பில் மக்களிடம் காட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் திரையில் சொல்வது மக்களுக்கு எளிதில் புரிந்து விடுகிறது.

அண்ணா கூட நேரடியாக சினிமாவில் நடிக்க விட்டாலும் கூட , திரைப்படத்திற்கு வசனம் எழுதி அரசியலுக்கு வந்தவர், வேலைக்காரி திரைப்படத்திற்கு வசனம் எழுதி அவர் உள்ளே நுழைந்தார். கருணாநிதியின் கூட திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி பின்னர் அரசியலில் நுழைந்தவர். அதுமட்டுமல்லாமல் அன்றைய காலத்தில் ஒரு சில நாடகங்களிலும் மனோரமாவுடன் இணைந்து கருணாநிதி நடித்துள்ளார்.

இவர்களைப் போலவே எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயும் திரையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் சினிமா நடிகர்களை தங்களுக்கு நெருக்கமானவர்களாக பார்க்கின்றனர். அதனால் தான் நடிகர்கள் அரசியலுக்கு எளிதில் வர முடிகிறது என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com