அமெரிக்கா சென்றுள்ள பாரத பிரதமர் மோடி அமெரிக்கா வாழ் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது தனது வாழ்வில் நடந்த சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
குவாட் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அப்போது அமெரிக்கா வாழ் இந்திய மக்களிடையே பேசிய மோடி, தனது வாழ்க்கைப் பற்றியும் பேசியுள்ளார்.
அதாவது, “ 2024ம் ஆண்டு பல நாடுகளுக்கிடையே மோதல் பதற்றங்கள் நிலவி வருகின்றன. ஆனால், சிலர் ஜனநாயகத்தைக் கொண்டாடுகிறார்கள். இது பாரதத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு கொண்டாட்டமாகும்.
பாரதத்தில் ஏற்கனவே தேர்தல் முடிந்தது. இனிதான் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 2 மடங்கு வாக்காளர்கள் அதிகம். இந்த பிரம்மாண்டம் நம்மை மிகவும் பெருமைப்பட செய்கிறது. மூன்று மாதக் கால வாக்குப்பதிவு செயல்முறை, 15 மில்லியனுக்கும் அதிகமான தேர்தல் நடத்துநர்கள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள், 2,500 அரசியல் கட்சிகள் மற்றும் 8,000 வேட்பாளர்கள், ஏராளமான வானொலி நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்கள், கோடிக்கணக்கான சமூக ஊடக கணக்குகள் ஆகியவை பாரதத்தின் துடிப்பைக் காட்டின.
நான் பல ஆண்டுகள் நாடு முழுவதும் அழைந்து திரிந்திருக்கிறேன். எங்கெல்லாம் உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சாப்பிட்டு, எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்குத் தூங்கி நேரத்தை செலவழித்தேன். கடல் கரைகள் முதல் மலைகள் வரை, பாலைவனங்கள் மற்றும் பனி மூடிய உச்சிகளிலிருந்து பல்வேறு பின்னணியைச் சேர்ந்த நபர்களை நான் சந்தித்தேன். அவர்களைப் பற்றி நன்றாக புரிந்துக்கொண்டேன்.
எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை என்றாலும், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி மிக அதிக வருடங்கள் பணியாற்றிய முதல்வராக இருந்தேன். 13 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றிய பிறகு மற்றவர்களால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டேன்.
நான் நாடு முழுவதும் பயணம் செய்ததே மாநில மற்றும் மத்திய மட்டங்களில் எனது நிர்வாக அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
பத்தாண்டுகளில் எனது செயல்முறை குறித்து உலகமும் நீங்களும் அறிவீர்கள். அந்த நம்பிக்கையே மூன்றாவது முறையாக என்னை பிரதமராக்கியது. இந்த வாய்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வைத் தந்துள்ளது.” என்று பேசினார்.