ஃப்ரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு புதிய மற்றும் கடுமையான தடை உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. வரும் ஜூலை 1, 2025 முதல், கடற்கரைகள், பூங்காக்கள், பள்ளிகளுக்கு வெளியே உள்ள பகுதிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட குழந்தைகள் இருக்கும் அனைத்து திறந்தவெளிப் பகுதிகளிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்படும்.
ஃப்ரான்ஸ் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கேத்தரின் வோட்ரின் (Catherine Vautrin) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகையிலை மறந்துவிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், "புகைப்பிடிக்கும் சுதந்திரம், குழந்தைகள் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதை தடுக்கிறது." என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு €135 (இந்திய மதிப்பில் சுமார் ₹12,000) வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகளைக் குறைக்கும் அரசின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஃப்ரான்ஸில் தினமும் சுமார் 200 பேர் புகைப்பிடிப்பால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில், ஃப்ரான்ஸ் புகைப்பிடிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே அலுவலகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற மூடிய பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது திறந்தவெளிப் பகுதிகளுக்கும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கஃபேக்களின் வெளிப்புறத் தளங்கள் (Café Terraces) மற்றும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் (e-cigarettes) இந்தத் தடையிலிருந்து விலக்கு பெற்றுள்ளன. குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், புகைப்பிடிப்பற்ற ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, ஃப்ரான்ஸ் முழுவதும் புகைப்பிடிப்போர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இதேபோல் மக்களின் நலனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் மத்தியிலும் இதுபோன்ற அதிரடி அறிவிப்பை வெளியிடுவது வரவேற்கத்தக்கதாக அமையும்.