

குழந்தைகள் பெரும்பாலும் தின்பண்டங்கள் மற்றும் சிப்ஸ் சாப்பிடுவதை அதிகம் விரும்புவர். சிப்ஸ் பாக்கெட்டுகள் உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறினாலும், அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி சிறுமி வாங்கிய ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டம், முன்டாஜே பகுதிக்கு அருகிலுள்ள சோமந்தட்கா கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சோமந்தட்கா கிராமத்தில் வசிக்கும் சிறுமி, பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது அருகில் உள்ள கடையில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு வந்து சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிடும் போது, அதில் கருகிய நிலையில் இருந்த பாம்பின் ஒரு சிறு பகுதியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதனை தனது பெற்றோரிடம் காட்டினார் அந்த சிறுமி. கருகிய நிலையிலிருந்த பாம்பின் ஒரு சிறு பகுதியைக் கண்டதும், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தனது மகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதனை செய்துவிட்டு, பயப்படும் படியாக ஏதுமில்லை என்று தெரிவித்தனர். அதன் பிறகே பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர், உடனே சிறுமி சிப்ஸ் பாக்கெட் வாங்கிய கடைக்குச் சென்றனர். அங்கு அந்த சிப்ஸ் பாக்கெட்டை கடைக்காரரிடம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான் விற்பனை மட்டுமே செய்கிறேன்; இது பற்றி எனக்கும் எதுவும் தெரியாது என கடைக்காரர் கூறவே, அங்கிருந்து சிறிது நேரத்தில் சிறுமியுடன் பெற்றோர் வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியோடு, கிராம மக்களுக்கு பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக சிப்ஸ் பாக்கெட்களில் அதன் சுவை மற்றும் நிறத்திற்காக வேதியியல் சேர்மங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் சிப்ஸ் சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிப்ஸ் பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு இருந்து சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிப்ஸ் பாக்கெட் தயாரிப்பின் போது தான் இந்தத் தவறு ஏற்பட்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.