தமிழகத்தில் 6000க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் மலை வாசஸ்தலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி, குடித்து முடித்த பின்னர் குடிமகன்கள் அவற்றை கண்ட இடங்களில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உடைந்த கண்ணாடி துண்டுகள் குத்தி இறப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதில் யானைகள் தான் அதிக அளவு பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் யானைகளின் பாதமானது மணல் மூட்டையை ஒத்து காணப்படும். இவை கண்ணாடி துண்டுகள் மீது கால் வைத்தால் கண்ணாடி துண்டுகள் பாதத்தை கிழித்து விடும். அது எளிதில் ஆறாது.
இயற்கையாகவே யானைகள் தினந்தோறும் 40 முதல் 50 கிலோமீட்டர் தூரம் நடக்கும் இயல்பு கொண்டவை. காலில் காயம் பட்டு உள்ள நிலையில், அவை நடந்து கொண்டே இருந்தால் அதில் ஏற்பட்டுள்ள புண் அவ்வளவு எளிதில் ஆறாது. பின்னர் காலை ஏற்பட்டுள்ள புண் புரையோடிப் போய்விடும். இதனால் யானைக்கு மதம் பிடித்து அது மற்றவர்களை தாக்க தொடங்கும். பின்னர் ஒரு கட்டத்தில் காயத்தின் பாதிப்பு அதிகமாகி அவை இறப்பை சந்தித்து வருகின்றன. இது கொடுமையிலும் கொடுமை.
இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் மலைவாச ஸ்தலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்கும் போது அது குவாட்டர், ஆப், ஃபுல் அல்லது பியர் என எந்த பாட்டில்களாக இருந்தாலும், அதன் விலையில் இருந்து பத்து ரூபாய் அதிகமாக பெறப்படும். வாங்கிச் சென்று விட்டு மது அருந்திவிட்டு அந்த வெறும் பாட்டிலை அதே டாஸ்மாக் கடையில் திரும்ப கொடுத்தால் நமக்கு பத்து ரூபாய் திருப்பி தரப்படும். திட்டமானது எந்தெந்த கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளதோ அந்தக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மது பாட்டில்களில் பிரத்யேக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறை ஓரளவுக்கு வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வன விலங்குகள் பாட்டில் துண்டுகள் குத்தி காயமடைவதும், இறப்பதும் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் ஹை கோர்ட்டில் இது தொடர்பான பொது நல வழக்கு ஒன்று வந்தது. அதில் தமிழக முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து ஐகோர்ட், இத்திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நேரம் எவ்வளவு அதிகரிக்கும்? அதற்கான கூடுதல் சம்பளம் தர முடியுமா? என்பது போன்று சில கேள்விகளை தமிழக அரசு முன் வைத்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் ஹை கோர்ட் குறிப்பிடுவது போல ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம், பணி நேரம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்தும் ஆய்வு நடத்தி நவம்பர் மாதத்தில் இருந்து திட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறோம் என பதில் அளித்துள்ளது. திட்டம் தமிழக முழுவதும் அமல்படுத்தப்படும் நிலையில் உடைந்த கண்ணாடி துண்டுகளால் வன விலங்குகள் மட்டும் அல்லாமல் மனிதர்களும் பாதுகாக்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
இது குறித்து இரு மாதங்களுக்கு முன்னர் நம் கல்கி ஆன்லைன் இதழில் 'அதிகாரிகள் மனது வைப்பார்களா?' என்ற தலைப்பில் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.