காசாவில் போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இஸ்ரேல்.
இஸ்ரேலின் காசாமீதான ஆதிக்கத்தை உடைக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதேபோல் ஹமாஸை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. இதனால், போர் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. யார் என்ன கூறினாலும், இஸ்ரேல் போரை நிறுத்துவதாக தெரியவில்லை.
இதனால், அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், பட்டிணியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரிலிருந்து தப்பிக்க மக்கள் பலரும் அகதிகளாக வேறு நாட்டிற்கு தப்பி ஓடுகின்றனர். தப்பிச் செல்லும் மக்கள் இஸ்ரேலிலிருந்து 10கிமீ தொலைவில் இருக்கும் யூனிஸ் என்ற நகரத்தில் தஞ்சம் அடைகின்றனர்.
இந்நிலையில், காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் தாங்கள் வசித்துவந்த பகுதிகளில் இருந்து புலம் பெயா்ந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த புலம்பெயர்ப்பு காரணமாக போலியோ அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவை கிடைக்கவில்லை. எனவே தொற்று நோய்கள் அதிகரித்துள்ளன. மறுபுறம் காசா குழந்தைகளிடையே போலியோ நோய் பரவல் தொடங்கியுள்ளதாக ஐநா கூறியுள்ளது. போர் காரணமாக போலியோ சொட்டு மருந்து பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் காசாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனையடுத்து இப்போது மீண்டும் பரவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பும் முன்வந்திருக்கிறது. இந்த மூன்று நாட்களில் சுமார் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை ஐநா சுகாதார செயற்பாட்டாளர்கள் செலுத்துவார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.