
பண்டிகை கால விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்ய உள்ளதால் , கூட்ட நெரிசல் அபாயங்களை தவிர்க்க தெற்கு ரயில்வே , குறிப்பிட்ட ரயில்வே நிலையங்களில் காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் நுழைய தடை விதித்துள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்புத்தூர் ஆகிய 3 ரயில்வே நிலையங்களிலும் கேரளாவில் எர்ணாகுளம் ரயில் நிலையத்திலும் காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் நுழைய தடை செய்யப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் நெரிசல் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே நடைமேடைகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.
குறைவான ரயில் சேவைகள் மற்றும் அதிக பயணிகள் காரணமாக பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றன. ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம் காரணமாக இது நிகழ்கிறது.தீபாவளி, சாத் பூஜை போன்ற விடுமுறை நாட்களில் பயணிகள் அதிகமாக குவியும்.
தாம்பரம், சென்னை கடற்கரை, பெரம்பூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 9 முக்கிய ரயில்வே நிலையங்கள் கண்டறியப்பட்டு , கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 24 மணி நேரம் மினி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களுக்கு வெளியே சுமார் 500-600 பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், இடங்களை ரயில்வே அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். சென்னை சென்ட்ரலில் 600 பேர் வரை இருக்க வைக்க சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, இதேபோல், எழும்பூரில் 100 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளத்திலும் இதே போன்ற இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படையின் முதன்மை தலைமைப் பாதுகாப்பு ஆணையர், சென்னை மற்றும் ஐந்து ரயில்வே பிரிவுகளுக்கு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். பிப்ரவரி மாதம் புது டெல்லி ரயில் நிலையத்தில் , கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்து 20 பேர் காயமடைந்த சம்பவத்திற்கு பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது தீவிரமாகியுள்ளது .
நெரிசலைக் கட்டுப்படுத்த, ரயில்வே ஏற்கனவே காத்திருப்புப் பட்டியலில்
உள்ள டிக்கெட்டுகளின் விற்பனையை 25% ஆகக் குறைத்துள்ளது.ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதி அட்டவணை வெளியிடுகிறது. இதனால் பயணிகள் மாற்று போக்குவரத்துகளை தேர்ந்தெடுக்க அவகாசம் இருக்கும்.
கூட்ட நெரிசலைத் தடுக்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், கோவை, எர்ணாகுளம் ஆகிய 4 ரயில் நிலையங்களில் காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு (Waitlisted Ticket Holders) தடை விதிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதனால் confirm டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே மேற்கண்ட ரயில் நிலையங்களில் உள்ளே செல்ல முடியும். மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைகள்:
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் நுழைவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
தாம்பரம், சென்னை கடற்கரை, பெரம்பூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, விழுப்புரம், புதுச்சேரி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஒன்பது ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கண்காணிக்க மினி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகிறது.
சிசிடிவி மூலம் தொடர்ச்சியாக கூட்டம் கண்காணிக்கப்படும்.
நடைமேடைகளில் பயணிகள் சீராக செல்ல ரயில்வே போலீஸ் கண்காணிப்பு இருக்கும்.