
நாட்டில் மாதச் சம்பளத்திற்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் சம்பளத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கப்படும். இந்தத் தொகை பணியாளர்களின் வருங்கால தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பிடித்தம் செய்யப்படுகிறது. மருத்துவத் தேவை, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பிஎஃப் தொகையை எடுக்க முடியும். அதிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பணத்தை எடுக்க விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
இந்நிலையில் பணியாளர்கள் இனி முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாதச் சம்பளம் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில விதிகளையும் திருத்தியுள்ளது வருங்கால வைப்புநிதி நிறுவனம்
கடந்த அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) முடிவுகளை எடுக்கும் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் (CBT) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஎஃப் பென்ஷன் தொகையை உயர்த்துவது மற்றும் பிஎஃப் விதிகளை தளர்த்துவது குறித்த முக்கிய ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிஎஃப் பென்ஷன் தொகை ரூ.1,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
11 ஆண்டுகளைக் கடந்தும் பிஎஃப் பென்ஷன் உயர்த்தப்படாமல் இருப்பது, பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பிஎஃப் பென்ஷனை உயர்த்தி தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பென்ஷன் தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் குழு திட்டமிட்டது. பென்ஷன் தொகையை உயர்த்துவது குறித்த விவாதம் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் ஒரு ஊழியர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக பிஎஃப் தொகையை எடுப்பதற்கான விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதச் சம்பளம் வாங்குவோர் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக எடுத்துக் கொள்ளும் வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேலும் கூறுகையில், “வருங்கால வைப்புநிதி தொகையில் பகுதி அளவு எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கான காரணங்கள் 13இல் இருந்து அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று 3 வகைகளாக குறைக்கப்பட்டு உள்ளன.இந்த விதிகளின் மூலம் பணியாளர் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 100% வரை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல, கல்வி மற்றும் திருமணம் செலவுக்காக பணத்தை திரும்ப பெறுவதற்கான வரம்புகளும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கல்வி தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக ஐந்து முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.வேலையின்மை, தொற்று நோய் பரவல், வேலை செய்த நிறுவனம் திடீரென மூடப்படுதல் மற்றும் இயற்கை சீற்றம் உள்ளிட்ட சிறப்பு சூழ்நிலைகளில் காரணம் எதுவும் தெரிவிக்காமல் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பிஎஃப் கணக்கில் 25% தொகையை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என்ற விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.